“காதம்பரி 2024 ” கோவையில் மையம் கொள்ளும் இசைப்புயல்

பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “காதம்பரி” எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான காதம்பரி கலை நிகழ்ச்சி விழா வரும் ஜனவரி 4 ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை  பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில்  நடைபெற உள்ளது.

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி. சூப்பர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், பி. எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் கர்நாடக இசை துறை தலைவர் முனைவர் விஜய ஜெயா, பி.எஸ்.ஜி சமுதாய வானொலி  சந்திரசேகரன்,  பி.எஸ்.ஜி  தொழில்நுட்பக் கல்லூரி ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர்  சுரேஷ் ஊடக தொடர்பு மேலாளர் உமா செங்கதிர் ஆகியோர் பேசினர்.

அப்போது அவர் கூறுகையில், நிகழ்ச்சிகளில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளின் இசை திறன்களை வளர்க்கும் விதமாக பி.எஸ்.ஜி.பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள உள்ளனர்.  நிகழ்ச்சியின் தொடக்க நாளில் பி.எஸ்.ஜி மாணவர்கள் பங்கேற்கும் பஞ்சபூதம் எனும் தலைப்பில்  பரதநாட்டிய நிகழ்ச்சியும், ஜனரஞ்சகம்  எனும் தலைப்பில் பாடகர் பரத் சுந்தர் பங்கேற்கும் கர்நாடக இசைக் கச்சேரி நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. இரண்டாம் நாளன்று

பி.எஸ்.ஜி  மாணவர்களின்  பரிணாமம் எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாடகரும்,  நடிகருமான சி.ஜி.குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.  தொடர்ந்து மூன்றாம் நாள்

பி.எஸ்.ஜி பப்ளிக் பள்ளி மாணவர்களின் இன்னிசையே,  தமிழிசையே எனும் கர்நாடக இசை கச்சேரி நிகழ்ச்சியும், இசை மற்றும் புல்லாங்குழல் எனும் தலைப்பில்   ப்ளூட்  ஜெயன்ட்  இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான்காம் நாள் முழுவதும் பி.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி கர்நாடக இசைத்துறை சார்பில் ஷேத்திர விஜயம் எனும் தலைப்பில் கர்நாடக  இசை கச்சேரி நடைபெறுகிறது.

மேலும், யுவா கலா ரத்னா விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் துவங்கும் இந்நிகழ்ச்சியில் அனுமதி இலவசம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.