சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் வினாடிவினா போட்டி

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த  ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில்,  மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

பத்து சுற்றுகளாக இந்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளியின் ஆகாஷ், அக்னி, திரிசூல் மற்றும் பிருத்வி ஆகிய அணிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். போட்டி முடிவில்                 யஷ்வந்த், கவின் சித்தார்த் மற்றும் ஆதவ் பிரசாந்த் ஆகியோர் இடம்பெற்ற  திரிசூல் அணி முதலிடம் பிடித்தது. ஆகாஷ் அணி இரண்டாம் இடத்தையும் பிருத்வி மற்றும் அக்னி அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணியினருக்குப் பள்ளிச் செயலர் கவிதாசன் சான்றிதழ்களையும் பரிசுப் புத்தகங்களையும் வழங்கிப் பாராட்டினார். அவர் தனது தலைமை உரையில், “தமிழ் வினாடி வினா போட்டியை இப்பள்ளியில் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் நமது நினைவாற்றல் தூண்டப்படுகின்றது. ஆழ்மனத்தில் பதிந்துள்ள செய்திகளை மீட்டுருவாக்கம் செய்து விரைந்து வெளிப்படுத்துகின்ற ஆற்றல் வளர்கின்றது. அத்துடன், மாணவ மாணவியர் குழுவாக இணைந்து விடைகாண வழிகாட்டுகின்றது. பாடநூல் சார்ந்தும் பொதுவான செய்திகளையும் மாணவ மாணவியர் அறிந்துகொள்கின்ற வகையில் இப்போட்டி நடத்தப்பட்டதற்கும், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கும் எனது பாராட்டுகள்” என்று பேசினார்.