நேரு கல்வி குழுமம் வழங்கிய நல்லாசிரியர்களுக்கான விருதுகள்

தமிழகம், கேரளத்தில் இயங்கி வரும் நேரு கல்விக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சிறப்பாகக் கல்விப் பணியாற்றும் சிறந்த முதுநிலை பேராசிரியர்கள் மற்றும் இளநிலை பேராசிரியர்களுக்கான, பி.கே.தாஸ் நினைவு சிறந்த பேராசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 15 ஆவது விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நேரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனிருதன் வரவேற்றார். நேரு கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலரும் வழக்கறிஞருமான கிருஷ்ணதாஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியினை தொடங்கி‌ வைத்தார். அப்போது பேசிய அவர், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கல்விக்கான அறக்கட்டளைகள் அதிகமாகச் செயல்பட்டு வருகின்றன. ஃபின்லேண்ட் போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் கல்வி முறைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையை முறையாகப் பின்பற்றினாலே கல்வியில் முன்னோடியாகத் திகழலாம் என்றவர்.,நேரு கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திறன் மேம்பாட்டுத் துறைகள் செயல்பட்டு வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், நேரு கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலருமான கிருஷ்ணகுமார் முன்னிலை‌ வகித்துப் பேசுகையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மூவாயிரத்துக்கும் அதிகமான துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பணிபுரியும் நேரு கல்விக் குழுமம் பொறியியல், ஆர்க்கிடெக், மருத்துவம், கலை அறிவியல், ஏரோ நாட்டிக்கள் எனப் பன்முகத்தன்மையுடன் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பணியாற்றும் பேராசிரியர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விருது ஆண்டு தோறும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிர் தொழில்நுட்பவியல் பிரிவின் தலைவர் கரிமா குப்தா கலந்து கொண்டு ஆசிரியர் பணியின் முக்கியத்துவங்கள் குறித்தான உரையை நல்கினார். இவரை தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜா கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில், தமிழகம், கேரளம், கர்நாடகா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதுநிலைப் பேராசிரியர்கள் பன்னிரண்டு பேருக்கும், இளநிலைப் பேராசிரியர்கள் ஆறு பேருக்கும் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது இரண்டு பேருக்கும் பி.கே.தாஸ் நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் இறுதியாகத் துணை ஒருங்கிணைப்பாளர் சுவர்ணலதா நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.