தேசிய அளவிலான சாகச முகாமில் கோவை மாணவர்கள்

தேசிய அளவிலான சாகச முகாம், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி நிறுவனம் மூலம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஹிமாச்சலப் பிரதேசம் செல்வதற்கு முன்னர் டெல்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

டிசம்பர் 5 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் இம்முகாமிற்கு 10 மாணவ மாணவிகள் மற்றும் குழுத் தலைவராக பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி பேராசிரியரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான விக்னேஷ் குமார் சென்றுள்ளார். இந்த 10 நாட்கள் பயிற்சியில் மலை ஏறுதல், மலைப்பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் மீட்பு பணியில் ஈடுபடுதல், கூடாரம் அமைத்து தங்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.