ஒழுக்கம் இல்லாதவர்கள் வாழ்வில் உயர முடியாது

கோவை கணபதியில் உள்ள சி.எம்.எஸ். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு விழா மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைவர் கே.கே.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் டி.ஆர்.அசோக், செயலாளர் கே.இராஜகோபாலன், துணைச்செயலாளர் எஸ்.என்.பிள்ளை, பொருளாளர் எம்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பள்ளியின் முதல்வர் பி.எஸ்.ஶ்ரீபிரியா ஆண்டறிக்கை வாசித்தார்.

நிகழச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது நல்ல பண்புகளும் ஒழுக்கமும் கற்றுக்கொள்ளாதவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் வாழ்வில் உயர முடியாது என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:- 45 ஆண்டுகளுக்கு முன்பு கோவையின் புறநகர்ப் பகுதியாக இருந்த, சிறு தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த, அதிகமான கூலித் தொழிலாளர்கள் வசித்த பகுதியாக இருந்த கணபதியில், கோயமுத்தூர் மலையாள சமாஜம் பள்ளியை தொடங்கி நடுத்தர மக்கள் கல்வி வர உதவும் உயர்ந்த செயலை செய்து வருவதற்காக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவினாசிகளும் கோவையிலும் சிறப்பான குழந்தைகள் நல மருத்துவர் என்று பெயர் பெற்ற டாக்டர் ஜி.கிரிவாசன் இந்த பள்ளியில் படித்தவர். அவரைப்போல் இந்த பள்ளியில் படித்தவர்கள் மருத்துவர்கள் ஆகவும் பொறியாளர்களாகவும் அரசு பணியிலும் உயர்ந்திருக்கிறார்கள். தற்போது இங்கே படிக்கின்ற மாணவர்களும் நன்றாக படித்து நல்லொழுக்கங்களை கற்று வாழ்வில் உயர வேண்டும்.

ஏழைகள் வாழ்வில் முன்னேறவும், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குழந்தைகள் தங்கள் இலட்சியங்களை நிறைவேற்றவும், இலக்குகளை அடையவும் கல்விதான் முக்கியமான கருவியாக இருக்கிறது. கல்விதான் சமத்துவம் தருகிறது. தெருவில் செருப்பு அணிந்து நடந்ததற்காக கட்டிவைத்து அடித்த ஊரில் மகன் காலில் ஷூ அணிந்து நடப்பதற்கான உரிமையை கல்விதான் தந்திருக்கிறது. இதை கவிஞர் ந.முத்துக்குமார் பதிவு செய்திருந்தார். கடந்த ஓணம் பண்டிகை அன்று நான் வைக்கும் போயிருந்தேன். இன்று வைக்கம் கோவிலில் எல்லா சாதியினரும் இறைவனை தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வைக்கம் போராட்டம் நினைவுக்கு வந்தது. வைக்கம் வீதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நடப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் கேரளாவிலிருந்த தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்ட பிறகு தமிழ் நாட்டின் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். போராட்டம் வெற்றி அடைந்த பிறகு வெற்றி விழா நிகழ்வில் கலந்து கொண்ட கேரளாவிற்கு வெளியே இருந்து கலந்து கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் தான் அந்த அளவு அந்த மலையாள மக்கள் நன்றி உணர்வோடு இருந்தார்கள். இன்றும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கேரள அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களையும் அழைத்து பெருமைப்படுத்தியது இங்கே நினைவு கூறத் தக்கதாகும். இன்று கேரளா மக்கள் கல்வியில் மிக உயர்ந்த இலக்கை அடைந்திருக்கிறார்கள்.

இதை நான் உங்கள் மத்தியில் சொல்வதற்கு காரணம் கல்விதான் ஏற்றத்தாழ்வுகளை போக்கும் கல்விதான் சமூகத்தில் சமநிலையை உருவாக்கும் என்பதை உணர்ந்து மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். படிப்பதற்கு வசதிகள் இல்லை என்று காரணம் கூறி முடங்கி விடக்கூடாது. கேரளாவில் தனது பெற்றோர் மூணாறு தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாக இருந்த நிலையில் இரண்டு தங்கைகளும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் கொச்சின் ரயில் நிலையத்தில் தலைச்சுமை கூலியாக இருந்தவர் வேலை செய்து கொண்டே இரவு பகலாக படித்து ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார் என்கிற வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் மும்பையில் ரோஷன் ஜஹான் என்கிற மாணவி உள்ளூர் எலக்ட்ரிக் ரயிலில் பயணம் செய்த போது கூட்டத்தில் தள்ளப்பட்டு கீழே விழுந்து இரண்டு கால்களும் அகற்றப்பட்ட நிலையில் நன்றாக படித்து மருத்துவராகியுள்ளார்.

அந்த வெற்றி அவருக்கு சுலபமாக கிடைத்து விடவில்லை. நல்ல மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் 80 சதவீதம் ஊனமு இருந்ததால் மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் எம்பிபிஎஸ் படித்து, அதன் பின்னர் எம்.டி. முடித்து இப்போது அவர் மருத்துவராக மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கை தரும் பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்களின் கடினமான உழைப்பும் படிப்பும் தான் அவரை குடியரசுத் தலைவராக உயர்த்தியது. எவ்வளவோ பெரிய தலைவர்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த போதிலும் அப்துல் கலாம் அவர்களின் எளிமையும் அரசு பணத்தில் தனக்காக எந்த செலவும் செய்யாதே நேர்மையும்தான் அவருக்கு மாணவர்கள் இளைஞர்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்று தந்திருக்கிறது.

மாணவனாக இருக்கும் போதே ஒழுக்கமும் சட்டங்களை மதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தனியாக இருக்கும்போது நாம் என்ன சிந்திக்கிறோமோ அதுதான் நமது அடையாளமாக இருக்கும். அதேபோல் நல்ல மாணவர்கள் கூட தவறான கும்பலில் சேர்ந்தால் தங்கள் அடையாளங்களை இழந்து அதனால் பெரிய ஆபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் எந்த துறையில் விருப்பமாக இருக்கிறார்களோ அந்தத் துறையில் வளர ஊக்கப்படுத்த வேண்டும். யாரோடு பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். மாணவர்களின் நண்பர்கள் யார் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களை பெற்றோர்கள் அடிக்கடி சந்தித்து தங்கள் மகன் அல்லது மகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் உங்கள் குழந்தைகள் ஒழுக்கமுள்ள நல்ல குழந்தைகளாக வளரும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மனிதனை உயர்த்தி விடாது. நல்ல ஒழுக்கமான பண்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் அவ்வாறு ஒழுக்கமான பண்புகளை கற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வளவு பெரிய மதிப்பெண் பெற்றிருந்தாலும் வாழ்வில் வெற்றி பெற முடியாது.

கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு சிறையின் பணியாளர்களும் அவரோடுசிறையில் இருந்தவர்கள் தப்பித்துப் போக வழிகாட்டிய போதும் தவறான தீர்ப்பு என்றாலும். நீதிமன்ற தீர்ப்பை மீறி சாக்ரடீஸ் என்று நடந்து கொண்டார் என்பதும் சாக்ரடீசே சட்டத்தை மீறி உள்ளார் என்பதைப் படிக்கும் எதிர்கால சந்ததிக்கு தவறான முன்மாதிரி ஆகிவிடும் என்று மறுத்து சாக்ரடீஸ் நஞ்சு உண்டு இறந்து போனார்.

இன்று சாக்ரடீசுக்கு நஞ்சு கொடுத்தவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நஞ்சுண்டு இறந்து போன சாக்கிரட்டீஸ் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆசிரியர்கள் புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் சொல்லித் தருகிறவர்களாக இல்லாமல் தங்களிடம் படிக்கும் மாணவர்களை தாய்மையோடு உன் தாய்மை உணர்வோடு பார்த்துக்கொள்ள வேண்டும். என்று பேசினார்.