நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும்            – டாக்டர் அருண் பழனிசாமி,

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இருதயம் சீரான இயக்கம் தொடர்பான ஹார்ட் ரிதம் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் கே.எம்.சி.ஹெச். செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி தலைமை வகித்தார். அவர் பேசுகையில் கடந்த ஏழு வருடங்களாக கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சீரற்ற இதய துடிப்பு நோய் குறித்து தொடர்ந்து கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சீரற்ற இதய துடிப்பு நோய் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. முன்னர் எளிதாகக் கண்டறிய முடியாத அசாதாரண இதயத் துடிப்பை தற்போது சுலபமாக கண்டறியப்படுவதை உடலில் அணியக் கூடிய சாதனங்கள் சாத்தியமாக்கியுள்ளன. முன்பு இந்த நோயுடன் 5 முதல் 10 வருடம் வரை வாழ்ந்தவர்கள் தற்போது தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு 30 முதல் 40 ஆண்டுகள் வரை கூட வாழ்வதற்கான சாத்தியக் கூறு உருவாகியுள்ளது. நோயாளிகளுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைத்திட மருத்துவர்கள் இது போன்ற நவீன மருத்துவமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

இருதய மின் இயற்பியல் (எலக்ட்ரோபிசியாலஜி) என்பது இருதய நோய் துறையில் ஒரு தனிப்பிரிவாகும். செல்களால் தூண்டப்படும் ஒருவித மின்னோட்ட சக்தியினால் நமது இருதயம் இயங்குகிறது. இந்த எலக்ட்ரிகல் சிஸ்டம் ஒழுங்கற்று இருக்கும்போது இருதய நோய் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இருதயம் துடிப்பது என்பது வழக்கத்தை விட மெதுவாக நடைபெறலாம் அல்லது வேகமாக துடிக்கலாம். சீரற்ற இருதய மேல் அறை துடிப்பு (Atrial fibrillation) என்பதும் இவ்வகை இருதய பிரச்சினைகளில் ஒன்று. உலகம் முழுவதும் சுமார் 60 மில்லியன் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் இருதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் மரணம் கூட ஏற்படலாம். தற்காலத்து அதிநவீன அதிவேக வாழ்க்கை முறையினால் இவ்விதமான இருதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இருதய துடிப்பைக் கண்காணித்து சீராக்கும் கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி பிரிவு செயல்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவினர் நோயாளியின் நிலைமைக்கேற்ப பிரத்யேக சிகிச்சைகள் அளிக்கின்றனர். இங்கு எம்ஆர்ஐ-க்கு ஏற்ற பேஸ்மேக்கர்கள், மின்காந்த அலை கண்காணிப்பு கருவி, முப்பரிமாண மேப்பிங் சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ சாதனங்கள் உள்ளன. மிகுந்த சிக்கலான நோய்களுக்கும் உலகத்தரமான சிகிச்சை வசதிகள் உள்ளன.

சீரற்ற இருதய மேல் அறை துடிப்பு சீராக்குவதற்கென்றே கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, க்ரையோஅப்லேஷன் (Cryoablation) என்ற அதிநவீன மருத்துவமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வித சிகிச்சைக்காக ஒரு பிரத்யேக சிகிச்சை மையத்தையும் ஏற்படுத்தியுள்ளது. க்ரையோஅப்லேஷன் என்பது மிகவும் சிக்கலான சீரற்ற இதயத் துடிப்பு நோய்க்கு சிறந்த முறையில் பாதுகாப்பான சிகிச்சை அளித்திடும் மருத்துவமுறையாகும். உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல இலட்சக்கணக்கான நோயாளிகள் இந்த சிகிச்சை மூலம் பலன் பெற்றுள்ளனர். இந்த அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் தற்போது கேஎம்சிஹெச் மருத்துவமனையில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது குறித்து கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறுகையில், இருதய மின் இயற்பியல் (எலக்ட்ரோபிசியாலஜி) துறை தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில் சீரற்ற இதயத் துடிப்புக்கான சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்ற விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 20-க்கும் அதிகமான நிபுணர்கள் கலந்துகொண்டனர். 200-க்கும் அதிகமான மருத்துவர்கள் பங்கேற்றனர் என்று கூறினார்.