படிப்பின்றி வாழ்வது அவமானம்  – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்

கோவை கிழக்கு பகுதி உலமாக்கள் சார்பில் பீளமேடு (ஈத்கா மஸ்ஜித் கபரஸ்தான்) பள்ளிவாசலில் மீலாது விழா மற்றும் இளைஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்விற்கு மௌலவி உபைதுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மௌலவி அல்ஹாஜ் யு. முஹம்மது ஷஃபி  துவக்க உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன், கோவை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அல்ஹாஜ்  அப்துல் அஜீஸ் பாகவி, சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி

மௌலவி அல்ஹாஜ் அபூதாஹிர் பாகவி ஹழ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் அ. முகமது ஜியாவுதீன் பேசுகையில்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாவதைவிட கல்வி அறிவில்லாமல் வாழ்வது அவமானம் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது, நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மீலாது விழாக்கள் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி வரவேற்கவும், பாராட்டவும் தக்க நிகழ்வாகும். ஒரு பள்ளிவாசலில் மீலாதுநபி விழாவை வளரும் தலைமுறைக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்வாக நடத்துவது சிறப்புக்குரியதாகும்.

பொதுவாக 13 ஆம் நூற்றாண்டிலேயே டமாஸ்கஸ், கைரோ ஆகிய பகுதிகளில் அனைத்துதரப்பு மக்களுக்கும் கல்வி கற்கிற வாய்ப்பை இஸ்லாமிய ஆட்சி  வழங்கி இருந்தது.  மேலும் ஸ்பெயினில் கார்போடாவில் 17 பல்கலைக்கழகங்களும் , இலட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட 70 நூலகங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதையும், கைரோவிலும், ஸ்பெயினிலும் முதியவர்களுக்கும், விவாகரத்தான (அல்லது) கணவனை இழந்த பெண்களுக்கும் இலவசமாக கல்வி வழங்கப்பட்டது என்பதையும் ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.

முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் மதரஸாவில் பொதுக்கல்வி பயின்று இருக்கிறார்கள். 1857-ல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேய அதிகாரி பஞ்சாபில் எண்ணற்ற இந்துக்களும் முஸ்லீம்களின் கல்வி நிறுவனங்களான மதரஸாவில் கல்வி கற்று வந்ததாக பதிவு செய்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டில் அல்ஜீரியாவை பிரான்ஸ் கைப்பற்ற முயன்ற போது அல்ஜீரியாவில் பிரான்சை விட படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பதை பிரான்ஸ் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

மதரஸா பள்ளிக்கூடங்களில் கணிதம், மருத்துவம், சட்டம் மற்றும் பகுத்தறிவு உள்ளிட்ட பொதுப்பாடங்கள்

உலூம் அல்-மகூல் என்ற முறையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு மதரஸா பள்ளிக்கூடங்கள் உலூம் அல்-மன்கூல் என்ற வகைப்பாட்டில் இறையியல் பாடங்கள் மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகின்றன.

ஒன்றுபட்ட இந்தியாவின் சிறந்த கவிஞரும், இஸ்லாமிய மெய்யியல் ஆய்வாளருமான அல்லாமா இக்பால் மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர். 1947-ல் ஆகஸ்டில் விடுதலை பெற்ற பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் முதல் முதலாக ஒலித்த பாடல் “ஷாரே ஜஹான்ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாரா” என்ற பாடலை இயற்றியவர். விண்வெளி வீரர்களின் சாதனைக்கு வாழ்த்திக் கூறும்போது அபலபோதைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அந்தப் பாடலைத்தான் பாடி வாழ்த்தினார்.

அல்லாமா இக்பால் ஒருமுறை இஸ்லாமிய மத அறிஞர்களான மௌலவிகள் நிறைந்திருந்த கூட்டத்தில் “நீங்கள் இறைவன் இருக்கிறான் என்று நம்பாதவனை காஃபிர் என்று சொல்கிறீர்கள். ஆனால், அவரை விட பெரிய காஃபிர் தன்னம்பிக்கை இல்லாதவன்” என்று குறிப்பிட்டார். “ஒருவன் தனது சக்தியின் மீது நம்பிக்கை வைத்தால் முடியாததும் முடியும்” என்றும், “வாழ்வில் கஷ்டம் வரும் போது விதியே என்று நொந்து கொண்டிருக்காமல் முயற்சி செய்பவனுக்குதான் இறைவன் நல்ல விதியை கொடுப்பான்” என்றும் நம்பிக்கையூட்டி “பிறையே உனக்குள் குறை இருப்பதாக வருந்தாதே!  பூரண சந்திரன் உன்னுள் தான் புதைந்திருக்கிறான்!” என்று எழுதிய கவிதைகள் மூலமும், தத்துவங்கள் மூலமும் விடுதலை போராட்டக்காலத்தில் நம்பிக்கை விதைத்தவர்.

சர் சையது அகமதுகான் மேலை நாட்டு கல்வி முறையை நாம் கற்றுக் கொண்டால் தான் நாம் ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்றும் விடுதலை பெற்ற இந்திய அரசியலில் புதுவாழ்வு பெறமுடியும் என்று சிந்தித்து அனைத்து மக்களும் படிக்கும் வகையில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை 19 ஆம் நூற்றாண்டில் நிறுவினார். பொதுக்கல்வி முறையை உருவாக்குவதற்கும் அனைத்து மக்களும் கல்வி கற்பதற்காகவும் ஊர் ஊராக சுற்றித் திரிந்து நிதி திரட்டினார். மேலை நாட்டு ஆங்கிலக் கல்விமுறையை படிக்கச் சொன்னதால் அவரை முஸ்லீம் இல்லை  என்று சிலர் சொன்னபோதிலும் கல்வி வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.  அவரது உழைப்பும், தியாகமும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாக உத்திரபிரதேசத்தில் உயர்ந்து நிற்கிறது.

ஆனால் இன்று இந்திய அளவில் முஸ்லீம்கள் கல்வியில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கும், படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறை பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும். இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் நடத்தப்பட்ட உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு இந்தியாவில் முஸ்லீம்கள் உயர்கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உயர் கல்வியில் 36% இதர பிற்படுத்தப்பட்ட சமூகமும், 14% தாழ்த்தப்பட்ட சமூகமும் இருக்கும் நிலையில் முஸ்லீம்கள் 5.6%க்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறது. முஸ்லீம் சமூகத்தில் படித்த ஆசிரியர்களும் குறைவாக இருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதரும் கற்பவராகவோ, கற்றுத்தரும் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் அல்லது கற்பவருக்கும் கற்றுக் கொடுப்பவருக்கும் உதவி செய்பவராக இருங்கள் என்று நபிகள் நாயகம் மூலம் வலியுறுத்தப்பட்டும், கல்வி கற்கிற ஆர்வமும் வசதியும் இளைஞர்கள் மத்தியில் இல்லை. பெற்றோர்களுக்கு குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறையில்லை என்பது வேதனைக்குரியது. ஆனால் இந்திய அளவில் உயர் கல்வியில் கேரள மாநிலத்தில் முஸ்லீம்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஒரு சமூகமோ அல்லது அமைப்போ தற்போது இருக்கும் நிலையிலிருந்து முன்னேற வேண்டும் என்றால் ஒரு குறிக்கோளோடு திட்டமிடல், அர்ப்பணிப்பு உணர்வு, செயல்பாடு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசலில் ஆன்மீக போதனைகளோடு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். நல்ல கல்விதான் அனைத்து மதங்களைச் சேர்ந்த, சமுதாய மக்களோடும் இணைந்து ஒற்றுமையாக வாழும் தன்மையை வளர்க்கும் என்று பேசினார்.

முன்னதாக மௌலவி அல்ஹாபிழ் ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் பீளமேடு பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ஹக்  நன்றி கூறினார்.