
முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி எப்படி கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்? அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான கதையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி, எஃகு, பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி, தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வணிக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இது தவிர, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) முன்னணி தரவரிசையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்’ 5 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது. தற்போதைய தலைமுறையினர் முகேஷ் அம்பானியை நாட்டின் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவராக அறிந்திருந்தாலும், கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் அவரது தந்தை என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இந்தியாவில் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1987-ல் நடந்தது, அதை ஏற்படுத்தியவர் திருபாய் அம்பானி.
கிரிக்கெட் உலகில் 1983 ஆம் ஆண்டில் வலிமைமிக்க அணியாக மேற்கிந்தியத் தீவு இருந்தது. அதே ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா உலக சாம்பியனாகியது. இதனையடுத்து, கிரிக்கெட் விளையாட்டு முன்னெப்போதையும் விட மிகவும் பிரபலமானது. 1983 வரை, அனைத்து கிரிக்கெட் உலகக் கோப்பைகளும் மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்து, இந்தியத் துணைக் கண்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. 1987 உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றிருந்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அதற்கான தொகையை செலுத்த போதுமான பணம் இல்லை.
ஸ்பான்சர்களை அணுகிய பிறகும், இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை திரட்டு முடியவில்லை. அந்த நெருக்கடியான தருணத்தில், திருபாய் அம்பானி எழுந்து நின்று போட்டிக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்தார். அதனால்தான் 1987 கிரிக்கெட் உலகக் கோப்பை என்று தேடும்போது, ரிலையன்ஸ் கோப்பை என்ற பெயரை நம்மால் படிக்க முடிகிறது.