டாக்ஸி,ஆட்டோ ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை ஆர்.எஸ். புரம் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமினை கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்  டாக்டர் சுனில் ஸ்ரீதரன் கூறியதாவது :- நவம்பர் 24ஆம் தேதி வரை  நடைபெறவிருக்கும் இம்முகாமில் தினமும் 100 ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும்.

நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும், இன்சுலினை கண்டுபிடித்த பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80 சதவீதம் பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையாளர் சிற்றரசு, டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர். முகமது ஷபாஸ், முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ், டாக்டர். அனுஷா, டாக்டர். விஜயகுமார், தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் மார்கெட்டிங் இணை துணை தலைவர் ரவி குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.