அதிகரிக்கும் மாரடைப்புக்கான காரணங்கள்; எச்சரிக்கும் மத்திய அரசு

இன்றைய சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரவலாக மாரடைப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு தான் மாரடைப்பு பிரச்சனைகள் அதிகரித்து  உள்ளதாக பரவலான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், மாரடைப்புக்கான காரணங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டுத் தொடரின் போது அதிக உயிரிழப்புகள் மாரடைப்பால் ஏற்படுவதாகவும் அதற்கான காரணங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.  அப்போது, இதற்கான தரவுகள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரானா தொற்று பாதித்து அதிலிருந்து மீண்டு வந்தவர்கள், கடினமான  வேலைகளை செய்வது, ஓய்வு இல்லாமல் உழைப்பு, மிக வேகமாக ஓடுவது, கடின உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற செயல்களை ஈடுபடாமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அதிகரித்து வரும் மாரடைப்பிற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதார குழு ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.