உச்சம் தொடும் பெண்கள்

இந்தியக் கடற்படை கப்பலில் முதல் பெண் கமாண்டிங் அதிகாரியைக் கடற்படை நியமித்துள்ளது.

முன்பெல்லாம் ஆசிரியை அல்லது செவிலியர் தொழிலே, பெண்களுக்கு உரிய பிரதான துறைகளாக இருந்தன. ஆனால், இன்று பெண்கள் சாதிக்காத துறைகள் என்று எதுவும் இல்லை என்கின்ற நிலை உருவாகியுள்ளது. இராணுவம், விமான ஓட்டுனர் எனப் பெண்கள் தடம் பதித்து கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில், கடற்படை கப்பலில் முதல் பெண் கமாண்டிங் அதிகாரியைக் கடற்படை நியமித்துள்ளது என்று தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்துள்ளார்.

கடற்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய  அட்மிரல் குமார், இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் அத்துமீறல்கள் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அப்பகுதிகளில் இந்தியக் கடற்படையினர் தக்க பதிலடி கொடுத்துக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், எதிரிகளை வீழ்த்தும் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதிவேகம் கொண்ட செயல்பாட்டு திறன்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் நமது தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அயராது பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றவர்.,  அனைத்திலும் அனைவரின் பங்களிப்பு என்ற கடற்படையின் தத்துவத்தின் அடிப்படையில் கடற்படை கப்பலில் முதல் பெண்  கமாண்டிங் அதிகாரியை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பெண்- அக்னி வீரர்களின் ஒட்டுமொத்த பலம் இப்போது ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றும் இந்திய கடற்படை கூட்டு ஒற்றுமைக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் கூறினார்.