கேரளா குண்டு வெடிப்பு எதிரொளி கோவையில் தீவிர சோதனை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்துவ மாநாடு வழிபாட்டின் போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சர்ச் வளாகத்தில் மக்கள் கூட்டம் மிகுந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாகக் கேரளா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும், தேசிய புலனாய்வு பிரிவு கேரளா விரைந்துள்ளது.

இந்நிலையில், கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தளங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக நகரில் போலீசார் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவை ரயில் நிலையங்களின் அனைத்து நடைமேடைகளிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பார்சல் மற்றும் வளாக பகுதியில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

நேற்று (அக்டோபர் 29) மதியம் துவங்கிய இந்த சோதனை இன்று ( அக்டோபர் 30) 2 வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இது தவிர மாவட்ட எல்லையிலும் சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையை போலீசார் நடத்தி வருகினறனர். மேலும்,  உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.