“நிலவு குடிச்ச சிம்ஹங்கள்” சுயசரிதை எழுதிய இஸ்ரோ தலைவர்!

இஸ்ரோவின்  தலைவர் சோம்நாத் தனது சுயசரிதை ஒன்றை “நிலவு குடிச்ச சிம்ஹங்கள்” என்ற தலைப்பில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் எழுதியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வருபவர் சோம்நாத். கேரளாவைச் சேர்ந்த இவர் தனது பதவிக்காலத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியது, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலத்தைச் செலுத்தியது,  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டச் சோதனை என பல்வேறு சாதனைகள் இவரது தலைமையில் நடந்துள்ளது.

இதனிடையே மக்களை ஊக்குவிக்கும் வகையில் தனது சுயசரிதையை ‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். தனது தாய்மொழியான மலையாளத்தில் எழுதியுள்ள இந்த சுயசரிதைப் புத்தகத்தை வருகின்ற நவம்பர் மாதம்  கேரளாவை சேர்ந்த லிபி பதிப்பகம் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிஐடியிடம் அவர் பேசுகையில்;  இந்த சுயசரிதையானது  உண்மையில் பொறியியல் அல்லது பி.எஸ்.சி.,யில் சேர வேண்டுமா? என்று கூட தெரியாத ஒரு கிராமத்து இளைஞனின் கதை. தனது  கல்லூரி காலத்தில் பணத்திற்காகத் தான் பட்ட துயரங்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள், நான்  எடுத்த சரியான முடிவுகள் மற்றும் இந்தியா போன்ற ஒரு சிறந்த  நாட்டில் நான்  பெற்ற வாய்ப்புகள் பற்றி இதில் குறிப்பிட்டு இருக்கிறேன். இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, சந்திரயான்-3 போன்றவற்றின் கதைகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த புத்தகத்தை எழுதுவதற்கான நோக்கமானது, எனது தனிப்பட்ட வாழ்க்கைக் கதையைக் கற்பிப்பதற்காக மட்டுமில்லாமல் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போது மக்கள் தங்கள் கனவுகளைத் துரத்துவதற்கு ஊக்கமளிப்பதே  ஆகும் ” இவ்வாறு சோம்நாத் கூறினார்.