தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்: ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு! 

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வு தொடர்பான அரசாணை ஒன்றை வெளியிட்டார்.  அதில், தங்கள் கோரிக்கைகள் நியாயமாக நிறைவேற்றப்படவில்லை, மின் கட்டண உயர்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அந்த வகையில், கோவையின் பல நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவைத் தெரிவித்ததோடு, கோவை கொடிசியா தலைவர் திருஞானம் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரை சந்தித்து மின் கட்டண உயர்வு தொடர்பாக 7 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அந்த மனுவில், உயர் மின்னழுத்தப் பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்சக் கட்டணம் முந்தைய கட்டணமான 350 ரூபாய்க்கு குறைக்கப்பட வேண்டும். தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் ஹவர் கட்டணத்தை நீக்க வேண்டும். அதே சமயம், உயர் மின்னழுத்தப் பயனீட்டாளர்களுக்கு பீக் ஹவர் நேரம் நான்கு மணி நேரமாகவும், பீக் ஹவர் கட்டணம் 20 சதவீதமாகவும் குறைக்கப்பட வேண்டும்.

வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பு 1 சதவீதம் இருக்க வேண்டும். சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் நீக்கப்பட வேண்டும் மற்றும் நெட் மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, தொழில் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணத்தைத் திரும்பப் பெற முதல்வரின் கவனத்திற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து லகு உத்யோக் பாரதி மாநில தலைவர் சிவகுமார் கூறுகையில், “தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திற்கு இன்று மட்டும் 5,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படக்கூடும். அதோடு, 3 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், முதல்வர் தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.