மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மாற்ற வேண்டும் – கிரெடாய் கோரிக்கை

வீடுகளுக்கான தேவை மக்களிடத்தில் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் சமீப காலமாக கட்டுமானத் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆயினும், இத்தொழில் துறையினர் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் சமீபத்திய கோவை வருகையின் போது பின்வரும் பிரச்சினைகள் குறித்து கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது என அதன் தலைவர்  குகன் இளங்கோ தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்ஜெட் வீட்டுத் திட்டத்திற்கான (Affordable Housing Scheme) வரம்பை உயர்த்துதல் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க இந்திய, அரசு குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ரூ.45 லட்சம் மதிப்புள்ள குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு, 1 சதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. ரூ.45 லட்சம் என்ற இந்த வரம்பு 2017-18 நிதியாண்டிலிருந்து இன்றுவரை மாறாமல் உள்ளது.

31.03.2018 அன்று இருந்த ரூ..45 லட்சத்தின் மதிப்பு இன்று ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி ரூ.56.37 லட்சங்களாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட கட்டுமானச் செலவு கணிசமான உயர்ந்துள்ளது, இதனால் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான திட்டத்தில் கட்டப்பட்ட பல வீடுகள் அதிகரித்துள்ள விலை ஏற்றத்தின் காரணமாகவும் மேற்படி ஜிஎஸ்டி சலுகை பெற தகுதியற்றவையாகிவிட்டன.

இதனால் பல நடுத்தர மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, ஜிஎஸ்டி சட்டத்தில் குறைந்த பட்ஜெட் வீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள வரம்பை ரூ. 60 லட்சத்திற்கு மேல் மாற்றி அமைக்குமாறு பொதுமக்கள் நலன் கருதி கிரெடாய் கோவை அமைப்பு மத்திய அரசை வலியுறுத்துகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பணவீக்க அடிப்படையில் இந்த வரம்பை உயர்த்துவது மிகவும் அவசியமாகிறது.

உள்ளீட்டு வரி வரவு (ITC) அளிக்க கோரிக்கை

ப்ராப்பர்டி டெவலப்பர்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் 2019-ம் ஆண்டு 5 சதம் ஆக (உள்ளீட்டு வரி வரவு (ITC) இல்லாமல்) நிர்ணயிக்கப்பட்டது. சிமெண்ட்டுக்கு 28 சதம் ஜி.எஸ்.டி. வரியும், ஸ்டீல் மற்றும் மற்ற பெரும்பாலான கட்டுமானப் பொருட்களுக்கு 18 சதம் ஜி.எஸ்.டி. வரியும், கட்டிட தொழிலாளர்களுக்கான கூலிக்கு 18 சதம் ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படுகிறது. இதனால் ப்ராப்பர்டி டெவலப்பர்கள் சுமார் 11 சதம் ஜிஎஸ்டி சுமையை ஏற்க வேண்டி உள்ளது. இந்த அதிக ஜி.எஸ்.டி-யினால் வீடு வாங்குபவர் மீது சுமை அதிகரிக்கிறது.

எனவே கிரெடாய் கோயம்புத்தூர் ப்ராப்பர்டி டெவலப்மெண்டுக்கான ஜிஎஸ்டி வரியை தக்க விகிதத்தில் நிர்ணயித்து உள்ளீட்டு கிரெடிட்டையும் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதனால் வீடு வாங்குபவர்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.150 முதல் ரூ.220 வரை விலை கணிசமாகக் குறையும்.

அதிகமான மக்கள் சொந்த வீடுகளை வாங்க வேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி சட்டத்தில் மேற்படி தேவையான திருத்தங்களைச் செய்ய கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.