‘ஈஷா’ உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு விருது!

ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய அமைச்சகத்துடன் இணைந்து தேசிய விருது வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்காக இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இதில் தேசிய அளவிலான ‘Membership Engagement’ என்ற பிரிவில் வெள்ளியங்கிரி FPO-க்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனத்தில் அதிகப்படியான விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்தி சிறப்பாக செயல்புரிந்து வருவதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர்  ஃபயஸ் அகமது கிட்வாய் இவ்விருதை வழங்கி பாராட்டினார். வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவரும் தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார், ஸ்வாமி ரப்யா விருதை பெற்று கொண்டனர்.

இவ்விருதை பெற்றதற்காக அந்நிறுவனத்தில் உள்ள விவசாயிகளுக்கு சத்குரு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்வீட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்த்துக்கள் வெள்ளியங்கிரி FPO. உங்களுடைய முயற்சிக்கும், வெற்றிக்கும் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. நம் விவசாயிகள் தான் பாரதத்தின் முதுகெலும்பு.

நம் தேசத்தில் உள்ள மக்கள் தொகைக்கு நீண்ட கால உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விவசாயிகளின் திறனை பொறுத்தே நம் தேசம் எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு தூரம் வரை வளர்ச்சி அடையும் என்பதை தீர்மானிக்க முடியும். விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை அதிகரிப்பதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்நிறுவனங்களால் விவசாயத்தின் இறுதி நோக்கமான தேசத்தின் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை நிறைவு செய்ய முடியும். உங்களுடைய குழு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.