மாங்கல்ய பாக்யம் அருளும் பாலமலை அரங்கநாதர்!

பசுமையான வயல்வெளிகள் மரங்கள்  நிறைந்த மலை உச்சியில் அருள்மிகு ஸ்ரீ பாலமலை அரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கோவையிலிருந்து சுமார் 30 கி. மீ தொலைவில் பெரியநாயக்கன்பாளையம் அடுத்து கோவனூர் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலை மீது உள்ளது.

திருக்கோவில் அமைப்பு :

இங்கு  அரங்கநாதர் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு  காட்சியளிகிறார்.மலை மேல் உள்ள பெருமாளின்  திருக்கோவிலை அடைந்தவுடன் ராஜகோபுரம் நம் அனைவரையும் வரவேற்கிறது. கோபுரத்திலிருந்து உட்புறம் சென்றால் அர்த்தமண்டபத்தில் ஒரே சன்னதியில் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் , பின்புறம் யோகா நரசிம்மரும் வீற்றிருக்கின்றனர். மகா மண்டபத்தில் செங்கோதை, பூங்கோதை தாயாருடன் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார். இதன் அருகில் கோரிக்கை மாலைகளைச் சுமந்து வடக்கு நோக்கிக் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது.

காரை மரத்தை தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் இத்திருக்கோவிலின் பின்புறத்தில் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளி அண்ணன் சுவாமி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் எழுந்தருளி இருப்பது சிறப்பம்சம். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தில்  நான்கு திருக்கரங்களுடன் அலங்காரப் பிரியரான அரங்கநாதரை  மலர் மாலைகள் சூடி வீற்றிருக்கும் அழகை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி காட்சியளிக்கின்றனர்.

குறிப்பாக, பின்புறப் பிரகாரத்தில் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் மாங்கல்ய வரம், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கயிறு கட்டி பிரார்த்தனை செய்வது வழக்கம்.

சிறப்பு வழிபாடு:

பௌர்ணமி நாட்களில் மாலை  6மணி முதல் இரவு 9 மணி வரை சத்யநாராயண பூஜை சிறப்பாக நடைபெறும். அந்நாளில் ஏராளமான பக்தர்கள் யாக பூஜையில் கலந்துகொண்டு தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்வர்.

இதையடுத்து, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மேலும், பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் போன்ற  நாட்களில் சிறப்பு வழிபாடுகள்  நடைபெறுவது வழக்கம்.

மேலும், பாலமலை அரங்கநாதர் திருக்கோவில் அருகில் பூஜ்ய ஸ்ரீகுருகிருஷ்ணாநந்தா சுவாமி சன்னிதி  தனியாக இடம்பெற்றுள்ளது. சுமார் 40 ஆண்டுகள் இமயமலையில் தவம் செய்து  சன்னியாசியான இவர் பாலமலை கோவிலில் 15 ஆண்டுகள் வாழ்ந்து தவம் செய்துள்ளார்.

தரிசன நேரம்:

தினமும் 3 கால பூஜைகளுடன் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பள்ளிகொண்ட அரங்கநாதரை தரிசிக்கலாம்.