ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முப்படை ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் 183-வது முப்படை ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதில்  சிறப்பு விருந்தினராக வெலிங்டனின் டி.எஸ்.எஸ்.சி. லெப்டினனட் ஜெனரல் வீரேந்திரவத்ஸ் கலந்துகொண்டார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் புதுடெல்லி இராணுவ கணக்குகள் துணைக் கட்டுப்பாட்டாளர் தீரஜ்குமார் கலந்துகொண்டு வரவேற்புரை வழங்கினார். பின்பு சென்னை இராணுவக் கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் விழாவில் பேசுகையில்,  இராணுவ ஓய்வூதிய குறைத்தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 75 சதவீத தீர்வு காணப்பட்டு ரூ.5.98 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகளவில் முதியோர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 1 கோடி முதியோர் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் காலத்தில் இது 1.5 கோடியாக உயரும்.  இருக்கும் வரை நாட்டுக்கும் இறந்த பின்னர் வீட்டுக்காகவும் உழைக்கும் ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் இம்முகாமில் தீர்வுகாணப்படும். ஸ்பர்ஸ் (Sparsh)  திட்டத்தில் ஓய்வூதியவர்கள் சந்திக்கும் சிரமங்களுக்கு வங்கி வாடிக்கையாளர் மையங்கள் மற்றும் முப்படை சேவை மையங்களை அணுகி தீர்வு பெறலாம் என்றார்.

இம்முகாமில்  வெலிங்டன் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிவக்குமார் மற்றும் முப்படை உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.