மாய உலகத்தில் மிதந்து கொண்டுள்ளார் உதயநிதி – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை செல்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “தற்போது ஆசிரியர்களின்  கோரிக்கையாக இருப்பது முன்பு மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரின் தேர்தல் அறிக்கையில் இருந்தது. அதனை அரசு நிறைவேற்ற வேண்டும்.

அரசாங்கம் குளறுபடியாக உள்ளதால் காவல் துறையும் குளறுபடியாக உள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக இருப்பது ஊடகங்களில் தெரியவருகிறது. பொம்மை முதலமைச்சர் ஆளுகின்ற நாட்டில் இது போன்ற சம்பவங்கள் தான் நடக்கும். உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

தமிழகத்தில் யார் யாருக்கு எதிரி என்று மக்களுக்கு தெளிவாக தெரியும். அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியும் இது தான். எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும், புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும், அதிக நிதி ஒதுக்க வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கை.

சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்கள்  மின் கட்டண உயர்வால் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர். அதற்கு சலுகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது குறித்து எதிர்காலத்தில் தான் தெரியும். பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதே எங்கள் முடிவு. கூட்டணி கட்சிகள் தங்களுடன் இணையும் பொழுது அதைப்பற்றி தெரிவிப்பேன் என்றார்.