கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி 

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கிராபியோ கிளப் மற்றும் ஈரநிலம் அறக்கட்டளை இணைந்து “பறவைகள் – உலகின் காப்பான்” என்ற மையக்கருத்தில் பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் கண்டுகளித்த இந்த ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்ட கல்லூரி முதல்வர் சரவணன் சுற்றுப்புறச் சூழலிலும், மனிதனின் வாழ்வியலிலும் பறவைகளின் பங்கினைப் பற்றிக் குறிப்பிட்டு, பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக கடலூர் ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஓவியர் தமிழரசன்  பங்கேற்றுப் பேசுகையில், இயற்கையோடு இயைந்த வாழ்வும், மனிதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தையும், அப்படிப் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் எதிர்விளைவுகளையும் உதாரணங்களோடு குறிப்பிட்டு விளக்கினார்.

61 ஓவியங்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில், பறவைகளின் இயற்கை சார்ந்த வாழ்வு, மனிதனும் பறவைகளும், உலகின் மேற்பரப்பில் பறவைகள் பற்றிய வண்ண ஓவியங்கள், கோட்டோவியங்கள் மற்றும் நவீன வண்ணக் கலவைகளுடன் கூடிய ஓவியங்கள் என பல்வேறு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஓவியங்களைக் கண்டு களித்த அனைவரும் ஓவியரிடம் விளக்கங்கள் கேட்டுப் புரிந்துகொண்டு, அவரை வெகுவாகப் பாராட்டினர்.