மன அழுத்தத்தின் சுமைகளை போக்கும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு!

மனித வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் செல்லப் பிராணிகளை, வீட்டில் வளர்க்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியையும் ஏற்படுகிறது.

அந்த வகையில், தன் சிறுவயதில் செல்லப் பிராணிகள் மீது கொண்ட அலாதி பிரியத்தால் உமா மகேஸ்வரன் தற்போது முழுநேரமாகப் பிராணிகள் வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

ஐ பாவ்ஸ் (I PAWS ) செல்லப் பிராணிகள் நல சங்கத்தின் செயலாளரும், கேட்ஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் பூனை காவலராக இருந்து வரும் உமா மகேஸ்வரன், தனது வீட்டில் பூனை, நாய், கிளி என ஏராளமான செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார்.

இவர் வீட்டில், ட்ரெடிஷனல் லாங் ஹேர் வகையை சேர்ந்த ஆறு பூனைகள் வளர்கின்றன. சைபீரியன் பூனைகள் என பலவகை நிறங்கள் மற்றும் வடிவங்களில் பூனைகளை இன்- ஹவுஸ் இனப்பெருக்கம் (பிரீடிங்) செய்து  வருகிறார்.

உலகத்திலேயே முதல் முறையாக பூனைக்கு வளைகாப்பு நடத்திய தருணம் நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிய உமா மகேஸ்வரன் விலங்குகளுக்கான தடுப்பூசிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

“வளர்ப்பு பூனைகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் இருக்க, பூனைகளுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை போடப்படும் பலவகையான சிறப்புத் தடுப்பூசிகள் பிரத்யேகமாக உள்ளன. இவை, பூனைகளின் உடல்நலத்திற்கும், ரேபிஸ் நோய்களை தடுக்கவும் உதவுகிறது.

மேலும், பூனையின் முடி உதிர்வதால் சிலருக்கு உடலில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவர்கள், ட்ரெடிஷனல் லாங் ஹேர் வகையை சார்ந்த பூனை வளர்ப்பதைத் தவிர்த்திட வேண்டும். மேலும்,  பூனைகள் எப்போதும் சுத்தமாக இருக்க விரும்பும்.எனவே, சுகாதாரத்தை நாம் சரியாகப் பாதுகாத்து வந்தால் செல்லப் பிராணிகளிடம் இருந்து பரவும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். செல்லப் பிராணிகளை வளர்ப்பதால் மன அழுத்தத்தின் சுமைகள், கவலைகள் என அனைத்தையும் போக்கிவிடும் என்கிறார் உமா மகேஸ்வரன்.