கோவை வேளாண் பல்கலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் மலர் கண்காட்சி -2024

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும்  கோவை ரோட்டரி கிளப் ஆகியோர் இணைந்து 6வது கோவை மலர் கண்காட்சியை-  2024 பிப்ரவரி 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மலர்களின் இரகங்களையும், வண்ணங்களையும், அழகினையும் அதன் வணிக முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் கோவை மக்களின் பார்வைக்காக இதுவரை 5 முறை மலர் கண்காட்சியினை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. அதன் வகையில், 11 ஆண்டுகளுக்குன் பின் 6வது முறையாக இம்மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இதில் மல்லிகை, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டர், பெட்டூனியா, சால்வியா மற்றும் பேன்சி போன்ற உதிரி மலர்களைக் கொண்டும், ரோஜா, கார்னேசன், ஆர்க்கிட், ஆந்தூரியம், லில்லியம், ஜெர்பெரா, லிஸியான்தஸ், ஹெலிகோனியா, ஜிப்ஸோபில்லா, ஸ்டேடிஸ் மற்றும் சொர்கத்துப் பறவை போன்ற கொய் மலர்களாலும் அலங்கார வகை பிராசிகா, பேங்க்ஸியா, லூயூகோஸ்பெர்ம் மற்றும் அலங்கார அன்னாசி போன்ற அரியவகை அயல்நாட்டு மலர்களையும் கொண்டு கலைநயத்துடன் பல்வேறு உருவ அமைப்புகளாக அலங்கரிக்கப்பட உள்ளன.

ஐந்து வருடங்களில் பல்வேறு மையக்கருத்துருவுடன் சிறப்பாக நடந்தேறிய மலர்க கண்காட்சிகள் மக்களின் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, வரும் 6வது மலர் கண்காட்சியும் அத்தகைய வண்ணம் அமையும் பொருட்டு கனவுகள் மலரட்டும்’ (Let Your Dreamz Blossom) என்ற மையக்கருத்துடன் நடைபெற உள்ளது.  இக்கண்காட்சி பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோர் கண்களுக்கு மலர் விருந்தளிக்கக் காத்திருக்கிறது.

மக்கள் சேவையில் உள்ள கோவை ரோட்டரி கிளப்புடன், இந்த மலர்க் கண்காட்சியை மேலும் சிறப்புறச் செய்யும் வகையில் உயர் ரக ஜாதி நாய்களின் அணிவகுப்பு, புகழ் வாய்ந்த பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு, புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சி, இசை நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு திடல் போன்ற  பல்வேறு சிறப்பம்சங்களுடன் இம்மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களுக்குச் சிறந்த அலங்கார மலர் கலையைக் காட்சிப்படுத்தும் போட்டியும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.  பொருட்காட்சி அரங்குகள் தோட்டக்கலை சார்பு நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் சித்த மருத்துவத் துறைகள் ஆகியவை இக்கண்காட்சியில் கலந்து கொண்டு பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளனர்.