புரட்டாசியில் அசைவம் தவிர்ப்பதன் காரணம் அறிவியலும் ஆன்மிகமும்

புரட்டாசி மாதம் பிறந்த உடனே பெருமாள் கோவில்களில் மக்களின் வருகை அதிகமாக காணப்படும். மறுபுறம் கறிக்கடைகளில் அசைவப் பிரியர்களின் வருகை குறைந்துவிடும். நாம் மற்ற மாதங்களில் அசைவ உணவுகளை உண்டாலும் புரட்டாசி மாதத்தில் அதனை  தவிர்த்து விரதம் இருக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறோம். இதற்கான காரணம் அறிவியலா ? ஆன்மிகமா ?

 

ஆன்மிகரீதியான காரணம் :

தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களில் ஒன்று புரட்டாசி. இந்த மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணிக்கும். கன்னி ராசியின் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். இவர் மகாவிஷ்ணுவின் சொரூபம் என்பதோடு சைவப்பிரியரும் ஆவார். அவர் ஆட்சி செய்யும் இம்மாதத்தில் பெருமாளை வணங்குவது நல்லது. அதோடு அசைவத்தை தவிர்த்து, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும் என சொல்லப்படுகிறது.

அதனால் இம்மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம்.

 

அறிவியல்ரீதியான காரணம் :

செப்டம்பர் மாதம் இடையில் தொடங்கி  அக்டோபர் மாதம் பாதிவரை புரட்டாசி மாதம் நீடிக்கிறது. இச்சமயத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மழைக்காலம் தொடங்கும். இந்த காலநிலை மாற்றத்தின் போது உடல்சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்ப்பது அவசியமான ஒன்று. இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல்சூடு அதிகரித்து உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

 

துளசி தீர்த்தத்தின் மகிமை :

துளசி இலை பெருமாளுக்கு மிகவும் பிரியமான ஒன்று. அதனால் எல்லா வைணவ தலங்களிலும் துளசி தீர்த்தத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கோவிலில் தரப்படும் துளசி தீர்த்ததிலும் மருத்துவ பலன்கள் பல உள்ளன. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.  இது புரட்டாசி மாதம் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஆற்றலைக் கொண்டுள்ளது.

 

நாம் அறிந்தோ அறியாமலோ கடைபிடிக்கும் புரட்டாசி மாத விரதமானது இவ்வளவு பயன்மிக்க ஒன்றாக திகழ்கிறது. நம் முன்னோர்கள் ஆன்மிக ரீதியாக கடைபிடிக்க சொன்ன நடவடிக்கைகளில் அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன. அதனை அறிந்து கொண்டு முன்னோர்களின் வழிமுறைகளை பின்பற்றினால் நமக்கும், நமது சுற்றுசூழலுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.