நேரு கல்லூரியில்  முதலாம்  ஆண்டு வகுப்புகள்  தொடக்க விழா!

நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  கல்லூரியில் பி.இ., பி.டெக்., எம்.இ., மற்றும் எம்.பி.ஏ., பிரிவில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமையில் நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற  இவ்விழாவில், நேரு பொறியியல் மற்றும்  தொழில்நுட்ப  கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவளத் துறை தலைவர் பி. ஹேமாமாலினி வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில், பொறியியல் கல்வியின் தேவை மற்றும் காலத்தின் இன்றியமையாமை குறித்து, நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். அதோடு, கல்லூரியின் சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகள் குறித்து கல்லூரியின் முதல்வர் ப. மணியரசன் கூறினார்.

அவரை தொடர்ந்து, நேரு கல்வி குழுமங்களின் செயல் இயக்குனர் நாகராஜா பேசுகையில், “ஒருவர் பொருளாதாரத்தில் மேம்பட்ட கல்வி எவ்வாறு அவசியமான ஒன்றோ..அதேபோல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நன்றியுணர்வு, பொறுப்பு மற்றும் ஆர்வம் உள்ளிட்ட பண்புகளை வளர்த்து கொள்வது அவசியம்” என மாணவர்களுக்கு  அறிவுறுத்தினார்.

இவ்விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக, கர்நாடகா மாநில டீமோ ஈவா வெல்னஸ் பிரைவேட் லிமிடெட்., நிறுவனத்தின் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், “படிப்பைத் தொடரும் பாதையில் அர்ப்பணிப்பு, நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மை அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி தருவதைத் தவிர்த்து புத்தகங்களை அதிக அளவில் வாங்கித்தர வேண்டும்” என அறிவுறுத்தினார்.

மேலும், செல்போன் மூலம் கிடைக்கும் தகவல்கள் மனதில் பதியாது,  புத்தகம் வாசித்தால் தான் மனதில் பதியும்.  இதனால், மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் போது எளிதில் வெற்றிபெற முடியும் என்றார்.