நாக பஞ்சமி: பயன்கள் மற்றும் வழிபடும் முறைகள்

பெரும்பாலான இந்திய மக்கள் இயற்கை வழிப்பாட்டிற்கு ஒரு தனி இடத்தை ஒதுக்கியுள்ளனர். இதில் குறிப்பாக இந்துக்கள், தெய்வங்களை வணங்குவதுடன் சூரியன், சந்திரன், ஆறுகள், மரங்கள், பசுக்கள் மற்றும் பாம்புகள் போன்ற இயற்கை வடிவங்களிலும் பக்தியுடன் வணங்கி வருகின்றனர். அதன் வகையில் நாக பஞ்சமி என்பது இந்து பண்டிகைகளின் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது.

ஆவணி மாதத்தில் வளர்பிறையில் (சுக்லா பஷா) வரும் பஞ்சமி திதியன்று நாக பஞ்சமி வழிப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இப்பண்டிகை ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 12.20 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 22 அதிகாலை 2.00 மணி அளவில் முடிவடைகிறது. அதில் காலை 5.53 முதல் 8.30 மணி வரை நாக பஞ்சமி பூஜைக்கு உகந்த நேரமாகத் திகழ்கிறது.

பாம்பு கிரகங்களான ராகு – கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், முன் ஜென்ம பாவங்கள், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதாவது உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதி குறைந்து, திருமணம், குழந்தை பேறு தடைகள் போன்ற பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு உகந்த விரத நாளாக நாக பஞ்சமி அமைகிறது.

எப்படி வழிபட வேண்டும் :

நாக பஞ்சமி அன்று காலை எழுந்து சுத்தமான பின், பூஜையறையில் நாகர் உருவச் சிலை இருந்தால் அதற்குப் பாலபிஷேகம் செய்யலாம். சிலைகள் இல்லையெனில் அம்மன் படங்களில் இருக்கும் நாகருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கலாம்.

வேதங்களில் பல நாகங்கள் உள்ளன. இருப்பினும் வாசுகி, அனந்தா, ஷேஷா, கம்பளா, பத்மா, தக்ஷகா, காளியா, கார்கோடகா, சங்க பாலன், திருதராஷ்டிரன் மற்றும் அஸ்வதார ஆகியவை நாக பஞ்சமி நாளில் முக்கியமாக வழிபடப்படுகின்றன.

 

விரதம்:

பொதுவாக, நாக பஞ்சமியில் பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கு வழிபட்டு விரதங்களை மேற்கொள்கின்றனர்.  இதனால் செல்வ வளம் மற்றும் ஆரோக்கியத்தில் மேன்மையைக் காண முடிகிறது.

வீட்டில் பூஜைகளை முடித்த பிறகு,  கோவிலில் உள்ள பாம்பு புற்றுக்குப் பால் ஊற்றி, மஞ்சள், சந்தனம்,குங்குமம், மலர்கள் போன்றவற்றை நாக தெய்வத்திற்கு அளித்து பிரார்த்தனை செய்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறமுடிகிறது.

மேலும், வெள்ளியில் நாக உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்துவது மிகவும் விசேஷமானது.

தவிர்க்க வேண்டியது:

நாக பஞ்சமியில் விரதம் இருக்கும் போது பொரித்த மற்றும் காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக, அந்நாளில் தீய வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லதாகும்.

நாக தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான இந்து பண்டிகையான நாக பஞ்சமியை மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் மிகுந்த நம்பிக்கையுடனும், பயபக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.