உருளைக்கிழங்கால் இறந்த பசு இரண்டு மாத கன்றுக்குட்டி பரிதவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே விதிமுறைகளை மீறி பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளை தின்று பசுமாடு ஒன்று இறந்துவிட்டது.. பசுவின் இரண்டு மாத கன்றுக்குட்டி பரிதவித்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனை கூடங்கள் ஏராளமாக உள்ளது. நாள்தோறும் கிழங்கு மண்டிகளில் மீதமாகும் உருளைக்கிழங்கு கழிவுகளை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் விதிமுறைகளை மீறி ஒரு சில மண்டி உரிமையாளர்கள் இரவு நேரங்களில் கழிவுகளை வாகனங்களில் கொண்டு சென்று மேட்டுப்பாளையத்தில்  பவானி ஆற்றங்கரையோரத்தில் சமயபுரம் பகுதியில் கொட்டி வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் இந்த கழிவுகளை கால்நடைகள் மற்றும் பவானி ஆற்றில் நீர் அருந்த வரும் யானைகள். காட்டெருமைகள் மான், உள்ளிட்ட வனவிலங்குகள் உண்டு வருகின்றன.

இந்நிலையில் சமயபுரத்தைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் வளர்ந்து வந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு ஒன்று இந்த கழிவுகளை தின்றதால் உயிரிழந்து விட்டது. அந்த பசுவின்  இரண்டு மாதமே ஆன கன்று குட்டி தாயின் உடலை சுற்றி சுற்றி வருகிறது. அந்த கழிவுகளுடன் ஏராளமான நெகிழி காகிதங்களும் கலந்து இருப்பதால் அதை உண்ணும் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு  மனிதர்களுக்கும் தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து  பசுமாடு உயிரிழந்தது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே காவல்துறையும், அரசு அதிகாரிகளும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் உருளைக்கிழங்கு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.