வேளாண் பல்கலையில் டி.டீ.பிஸ்வாஸ் நினைவுச் சொற்பொழிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தில் இயங்கி வரும் மண்ணியல் துறையில் இந்திய மண்ணியல் சங்கத்தின் சார்பில் 16வது டி.டீ.பிஸ்வாஸ் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதில் இந்திய மண்ணியல் சங்கத்தின் கோவை பிரிவு தலைவர் சாந்தி, இயற்கை வள மேலாண்மை இயக்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் டி.டீ. பிஸ்வாஸ் நினைவு சொற்பொழிவினை பற்றியும் டி.டீ. பிஸ்வாஸ் மண்ணியல் பிரிவுக்கு ஆற்றிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையுரை வழங்கினார். அவர் தம் உரையில், மண்வளத்தின் முக்கியத்துவத்தையும், நீண்ட உரப்பரி சோதனைத்திடல்கள், நிரந்திர உரப்பரிசோதனைத்திடல்கள் ஆகியவற்றில் அங்கக கரிமத்தின் சேமிப்பினை கணக்கிடுவது அத்தியாவசியமானது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மண் கரிமப்பொருட்களைப் பற்றிய ஆய்வில் அணு உத்திகளின் பங்கீட்டினை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் மற்றும் மண் வள ஆராய்ச்சியில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பங்கீடு மிகவும் குறிப்பிடத் தகுந்தது என்றும் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் இத்துறையின் மூலம் உருவாக்கப்பட்ட நீரில் கரையும் உரங்கள், பயிருக்கேற்ற நுண்ணூட்ட உரக்கலவைகள் போன்றவை வேளாண் பெருமக்களுக்கு உதவும் முக்கிய கண்டுபிடிப்புகளாகும் என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதன்மையர் இராஜஇராஜன் “மண்ணின் கரிமப்பொருட்களுக்கான அணு உத்திகள்” என்ற தலைப்பில் மண்வள மேம்பாட்டில் கதிரியக்க ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாக உரையாற்றினார்.

இந்நிகழ்வில் 125 விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.