புற்றுநோயை குணப்படுத்த உதவும் வெள்ளி நானோ துகள்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

பாரதியார் பல்கலை உதவி பேராசிரியர்கள், புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளனர்.

அறிவு சார்ந்த பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைகள் முற்போக்கான சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்குகிறது. காப்புரிமைகள் அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் மிகவும் மதிப்புமிக்க வடிவமாகக் கருதப்படுகின்றன.

பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மைய இயக்குநர் பரிமேலழகன் முயற்சியால், பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மையம் கடந்த ஆறு ஆண்டுகளில் 32 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது. கூடுதலாக, இந்த மையத்தின் மூலம் 2023 வரை இந்திய அரசு 14 காப்புரிமைகளை வழங்கியுள்ளது. இந்த வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து, 31 ஜூலை 2023 அன்று பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியை சாரதாதேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் குருசரவணன் ஆகியோருக்கு, தமிழகத்தின் மாநில மலரும் அரிய மூலிகையான செங்காந்தள் தாவரத்தின் கிழங்கின் சாற்றிலிருந்து வெள்ளி நானோ துகள்களை உருவாக்கம் செய்ததற்காக இந்திய அரசினால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது .

நானோ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படும் பல்வேறு வகையான உலோக நானோ துகள்கள் புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை அளிக்கும் முறைகளில் தற்போது முதன்மை மற்றும் முக்கிய பங்காற்றுகிறது. தற்போதைய நிலையில் தாவரங்களில் இருந்து ஒரே சீரான அளவிலான நானோ துகள்களை உருவாக்கம் செய்யும் ஆய்வுமுறைகள் நடைமுறையில் இல்லை.

எனவே இயற்கை முறையில் செங்காந்தள் தாவர கிழங்கின் சாற்றினை கொண்டு வெள்ளி நானோ துகள்களை கண்டறியும் ஆராய்ச்சியினை 2020 ஆம் ஆண்டு வரை பாரதியார் பல்கலைக்கழக உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியை. சாரதாதேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் குருசரவணன் ஆகியோர் மேற்கொண்டு ஒரே சீரான அளவு மற்றும் வடிவம் கொண்ட வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்தனர், மேலும் இதற்கான காப்புரிமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் இந்திய காப்புரிமை அலுவலகதில் விண்ணப்பிக்கபட்டது. கடந்து 31.07.2023 அன்று இந்திய காப்புரிமை அலுவலகத்தால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த துகள்கள் புற்றுநோய் செல்களால் எளிதில் உட்கரகிக்கப்படுவதன் மூலம் புற்றுநோய் செல்களை வெள்ளை இரத்த அணுக்கள் எளிதில் அடையாளம் கண்டு புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் தாவரங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் வெள்ளி நானோ துகள்கள் பக்கவிளைவுகளற்ற, நிலைப்புத்தன்மை கொண்ட மற்றும் நீண்ட காலத்திற்கான நம்பகத்தன்மையோடு புற்றுநோய்க்கு எதிரான செயல்திறனை உறுதி செய்கிறது.

பயன்பாடு : மேலும் வெள்ளி நானோ துகள்கள் உயிர் மருத்துவத்துறை, நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகள், புற்றுநோய் சிகிச்சை முறைகள், பயோசென்சார்கள், எலும்பு திசு பொறியியல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் போன்ற பல்வேறு துறைகளில் இந்த துகள்களில் பயன்பாடுகளை வழங்குகிறது.

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் லொவ்லினா லிட்டில் பிலோவர், பதிவாளர் முருகவேள் ஆகியோர் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மையத்தின் தொடர் ஆக்கபூர்வமான செயல்பாடுகளினால் இதுபோன்ற காப்புரிமைகள் பெறுவதன் மூலம் பாரதியர் பல்கலைக்கழகத்தின் தரம் உலக அளவில் உயரும் என்றும், உலக பல்கலைக்கழக தவரிசையில் முன்னேற வழிவகுக்கும் என்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.