ஆதரவற்ற தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி

கோவையில், ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மை காலங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை  மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கோவையில் துவங்கியுள்ளது.

அதன்படி புதன்கிழமை புளியகுளம், ஹவுசிங் போர்டு, அலமேலுமங்கம்மாள் லே-அவுட், ரெட்பீல்டு சாலை ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கோவை மாநகராட்சி சார்பில் பிரத்தியேக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு, தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.