2 ஆண்டுகளில் யானையால் உயிர் பலி இல்லை வால்பாறை வனத்துறையினர் தகவல்.

வால்பாறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி யாரும் பலியாகவில்லை. இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை பொழியும்.

வன வளம் பசுமைக்கு திரும்பியதும், கேரள வனப்பகுதியில் இருந்து யானைகள், வால்பாறைக்கு வரும்.தொடர்ந்து 10 மாதத்திற்கு மேலாக இந்த யானைகள் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனியாக முகாமிடுகின்றன. யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிடுகின்றன.

இரவு நேரத்தில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள், வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன.இந்நிலையில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய
இருவனச்சரகங்களில் கடந்த, 1994 முதல் 2021 வரையில் யானை தாக்கி, 48 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் (மே மாதம் வரை) வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் இயற்கை பாதுகாப்பு அமைப்பு, வனத்துறையினருடன் இணைந்து செயல்படுவதால் சமீப காலமாக, வனவிலங்கு – மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி குறித்து பொதுமக்களுக்குவாட்ஸ்ஆப்’ வாயிலாக முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதே போல் யானைகள் நடமாடும் பகுதியில், வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் முன் கூட்டியே சென்று, யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பதால், வால்பாறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யானை தாக்கி யாரும் பலியாகவில்லை.இவ்வாறு, தெரிவித்தனர்.