ஆனைமலையில் மகளிர் காவல் நிலையம் திறப்பு.

ஆனைமலை அருகே, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி சரகத்தில், கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம், தாலுகா, வடக்கிபாளையம், கோமங்கலம், நெகமம், என, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களும், வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட கோட்டூர், ஆனைமலை, ஆழியாறு, வால்பாறை, காடாம்பாறை, முடீஸ், ேஷக்கல் முடி என, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளன.

இந்த இரண்டு சரகத்துக்கும் ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன், பொள்ளாச்சியில் மட்டும் உள்ளது.

குடும்ப வழக்குகள், மகளிருக்கு எதிரான புகார்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள், புகார் கொடுக்க பொள்ளாச்சி வந்து காத்திருக்கும் சூழல் இருந்தது. மேலும், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்ய காலதாமதம் ஏற்பட்டது.

எனவே,வால்பாறை சரகத்துக்கு ஆனைமலையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், தமிழக அரசு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கஉத்தரவிட்டது.

அதன்படி, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.கோட்டூர் அருகே தென்சங்கம்பாளையம் சமத்துவபுரத்தில் உள்ள சமுதாயக்கூடம், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, காணொலி வாயிலாக, போலீஸ் ஸ்டேஷனை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி.,க்கள் பிருந்தா, ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் குமார், சுமதி, கோப்பெருந்தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.ஐ.,க்கள் நாகராஜ், முருகவேல் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.போலீசார் கூறுகையில், ‘ஒரு இன்ஸ்பெக்டர், எட்டு போலீசார்பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட மகளிர், இந்த ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம்,’ என்றனர்.