மாதங்கி அறக்கட்டளை சார்பில் “ஈசனின் இசை” எனும் 12 மணி நேர நிகழ்ச்சி

பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தினாலும், சமுதாய எதிர்பார்ப்புகளினாலும்,“எப்போதுமே சந்தோசம்” என்ற நிலை மாறி “ எப்பொழுதாவது சந்தோசம்” என்பதற்கு பழகிவிட்டோம். சந்தோசத்துக்காக பிரத்யேக கொண்டாட்டங்களையும், பல்வேறு கேளிக்கைகளையும் உண்டாக்கினோம். இதுவும் மறந்து போய் கொண்டாடினால் தான் சந்தோசம் என்ற நிலைக்குதள்ளப்பட்டு முழுவதுமாக மாறிவிட்டோம்.

சிலருக்கு விளையாட்டினால் சந்தோசம், சிலருக்கு தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளால் சந்தோசம், சிலருக்கு வேலை செய்வதனால் சந்தோசம். சிலருக்கு வகைவகையான சாப்பாட்டில் சந்தோசம், இன்னும் சிலருக்கு வார இறுதி பார்ட்டி நடனத்தில் சந்தோசம்.

ஆனால் இந்த கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் தரும் இன்பமெல்லாம் கானல்நீர் போல தோன்றி மறையக் கூடியது, தற்காலிகமானது. எத்தனை முறை எதிர் கொண்டாலும் இந்த நிதர்சனமான உண்மை மட்டும் இந்த மனிதர்களுக்கு இன்னும் புரியவில்லை.

வெளிசூழ்நிலையை தனக்கேற்றவாறு மாற்றி, ஐம்புலன்கள் மூலமாக உணரக் கிடைக்கும் அனைத்து விதமான சந்தோஷங்களும் நிலையற்றது. என்றைக்கு இந்த உண்மை ஒருவருக்குப் புரிகிறதோ! அன்றே அவன் மனதுமுழுமையான அமைதி பெறுகிறது.

ஆட்டமெல்லாம் ஆடி அடங்கிய அந்த மனதின் மயான அமைதியில், அந்த ஒன்றும் இல்லாத தன்மையின் வெறுமையில் ,ஒருமிகப்பெரிய ஆனந்தம் காத்திருக்கிறது. கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு மனிதன் அடையும் தேன்துளி போன்ற சந்தோசத்தைவிட லட்சம் மடங்கு கோடி மடங்கு பெரிய கடல் போன்றது அந்தப் பேரானந்தம். அதுவே உண்மையான கொண்டாட்டம்.

அந்த பேரானந்த நிலையில் கேட்கும் இசையையே “பரநாதம்” என்கிறோம். எந்த விதமான வெளி உலக சப்தங்களுடனும் ஒப்பிட முடியாத ஒரு அற்புதமான இசை,அதையே “ஈசனின் இசை” என்கிறோம்.

அதை ஒவ்வொருவரும் உணர்வதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பை இந்த மகா சிவராத்திரி அன்று இயற்கையே நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. அன்று, நம் உடலையும் மனதையும் சரியான நிலைக்கு கொண்டுவரும் போது ஈசனின் இசையை அனைவராலும் உணரமுடியும்.

இச்சிறப்புமிக்க “ஈசனின் இசை” எனப்படும் 12 மணி நேர மகா சிவராத்திரி நிகழ்ச்சி கோவை பிருந்தாவன் ஆடிட்டோரியம், சின்னியம்பாளையத்தில் மாதங்கி அறக்கட்டளையின் நிறுவனர், ஆன்மீக குரு மித்ரேஷிவா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.

பிப்ரவரி 18 மாலை 6 மணியிலிருந்து பிப்ரவரி 19 காலை 6 மணி வரை ஆன்மீக சத்சங்கங்கள், ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், தியானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.