ரோட்டரி சங்கம் சார்பில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு கௌரவ விருது!

பொள்ளாச்சி ரோட்டரி சங்கத்தின் சார்பில், இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியருமான சிவனுக்கு, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் (For the sake of honour 2022-2023 Award) விருது வழங்கப்பட்டது.

விண்வெளி மற்றும் தொழில்நுட்பத் துறையில் நான்கு தலைமுறைகளாக முழுமையான பங்களிப்பை வழங்கி வருவதைப் பாராட்டி, அவரை கௌரவப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவன் பேசியதாவது: இந்த விருதை இஸ்ரோவில் உள்ள தனது குழுவினருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். அவர் செய்த அனைத்து சாதனைகளும் தனது குழுவால் சாத்தியமானது என்றார். பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் குறிப்பாக விண்வெளி உள்கட்டமைப்புத் துறையில் தொழில்முனைவோராக மாற வேண்டும். விண்வெளி நடவடிக்கைகளுக்கு பொள்ளாச்சி ஒரு முக்கிய மையமாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்.

இந்த நாட்டை உலகத்தின் முன்னணி நாடாக மாற்ற பல்வேறு துறைகளில் பிரதமர் எடுத்துள்ள முயற்சிகளால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கல்வி, ஸ்டார்ட் அப், தொழில் ஆகியவற்றின் சூழலை துடிப்பானதாக மாற்றுவதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. மேலும் இந்த சூழல் உண்மையில் தொழில்முனைவோருக்கு உகந்த ஒன்றாகும்.

மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடிச்செல்பவர்களாக இருப்பதை விட தொழில்முனைவோராக மாற முயல வேண்டும். மேலும் விண்வெளி உள்கட்டமைப்பு சந்தையில் கால் பதிக்க வேண்டும். ஏனெனில் இதில் நாட்டிற்கும் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்கும் முன்னேற்றத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.