தடைகளை உடைத்து பெண்கள் முன்னேற வேண்டும்!

– வாசுகி, செயலர், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கத்தின் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் முன்னணி அறிவியல் அமைப்புகளில் ஒன்றான இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் (ISCA – Indian Science Congress Association) கொல்கத்தா இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. கொங்குநாடு கல்லூரி மற்றும் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் கோவை பதிப்பு இணைந்து கருத்தரங்கை நடத்தியது.

அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் நிலையான வளர்ச்சி பற்றி கருத்தரங்கில் பேசப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக ஐஎஸ்சிஏ பொது தலைவர் விஜய்லட்சுமி சக்சேனா கலந்துகொண்டு பேசுகையில்: இந்த 21 ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. விவசாயம், விண்வெளி, மருத்துவம் என அனைத்து துறையிலும் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துவிட்டது எனக் கூறினார். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும் பேசினார்.

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். அதோடு, பணியிடத்திலும் சமூகத்திலும் பாலின அடிப்படையிலான பாகுபாடும் பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

ஐ.எஸ்.சி.ஏ வை சேர்ந்த உறுப்பினர்கள், பெண்களின் மேம்பாட்டிற்கு கல்வியே சிறந்த ஆயுதம் என்றும், அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை அதிகளவில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டனர். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த சில கருத்துக்களையும் முன்வைத்து பேசினர்.

கோவை ஐ.சி.ஏ.ஆர் சுகர் கேன் பிரீடிங் இன்ஸ்டிடியூட் இயக்குனர் ஹேமபிரபா விவசாயத்தில் பெண்களின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். அவர் மேலும் பேசுகையில்: இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. உணவு பாதுகாப்பு ஏறு முகமாக இருக்க வேண்டும் எனில், பெண் விவசாயிகளின் பங்கு அதிகரித்து இருக்கவேண்டும் என்றார்.

ஆண்களை மண்ணின் மைந்தன் என்கிறோம். ஆனால் நிஜத்தில் பெண்களே பெரும் விவசாய சாதனையை முன்னெடுத்து சென்றுள்ளதாக பதிவிட்டார். இன்று நம் அரசு சார்பில் நிறைய பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. பல விவசாயம் சார்ந்த பயிற்சிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் வழங்குகின்றது. மேலும் கரும்பு கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது பற்றி ஐசிஏஆர் பயிற்சி அளிக்கின்றது என விவசாயத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி விரிவாக விளக்கினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி கூறியதாவது: பெண்கள் மேம்பாடு பற்றி பேசினால் முதலில் என் நினைவுக்கு வருவது பாரதி தான் எனக் கூறி, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற மகாகவி பாரதியாரின் கும்மியடி பாடல் வரியை மேற்கோள் காட்டினார்.

பெண் கல்வியை, குறிப்பாக உயர்கல்விகளில் இன்னும் மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கான நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்போது பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்பட முடியும். தங்களுக்கு இருக்கும் பல தடைகளை உடைத்து பெண்கள் முன்னேற வேண்டும் என்று கூறினார்.