‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்ட விழிப்புணர்வில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கடந்த 2022 ஜூன் மாதம் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

கோவையில் உள்ள குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றங்களும் நடவாமல் தடுப்பதும், அவர்களை அக்குற்றங்களிலிருந்து பாதுகாப்பது மற்றும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இதன் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள, மொத்தம் 60 மகளிர் உதவி மைய அதிகாரிகள் (Women Help Desk Officers) இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 1208 பள்ளிகளில், 3561 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 1,90,000 பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

இதனை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில், ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் மகளிர் உதவி மைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதில் அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய காவல் நிலையமாக பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

மேலும் காவல் நிலையங்களில் சிறப்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பெண் காவலர்கள் கௌசல்யா, மீனா பிரியா, பிரேமா மற்றும் சரிதா ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் எதிரொலியாக வழக்குகள் பதிவு செய்வதற்கு உந்துகோளாக இருந்த காவலர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.