கொரோனா அச்சுறுத்தல் கோவை விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு

உருமாறிய கொரோனா எதிரொலியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் அதற்கான மையம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை முதல் பயணிகளை கண்காணிக்க மீண்டும் தெர்மல் ஸ்கேனரை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் இன்று முதல் பயணிகளை கண்காணிக்கும் பணியினை கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் துவக்கி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மொத்தம் 22 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால் 14 நாட்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.

விமான நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமிநாசினி அடிக்கப்பட்டு வருகிறது. ஐசலேஷன் ரூம் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதேபோல ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அறை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின் பெயரில் பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. சளி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்டவை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.