கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் இருந்து கோவை வந்த 162 பேர் கண்காணிப்பு

புதிய வகை கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, கோவை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு நாள்களில் வந்த வெளிநாட்டுப் பயணிகள் 8 பேரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் 162 போ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

உருமாறிய பி.எஃப்.7 என்ற கொரோனா சீனா, அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் சிலருக்கு இந்த வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு, நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வெளிநாட்டுப் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆா்.டி.பி.சி.ஆா் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் அருணா கூறியுள்ளதாவது:

கொரோனா அறிகுறிகள் காணப்படும் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்து முடிவுகள் கிடைக்கும் வரை சுகாதாரத் துறையின் கண்காணிப்பு மையத்தில் வைத்திருக்கவும், மேலும், ஆா்.டி.பி.சி.ஆா் பரிசோதனையை அறிகுறிகள் இல்லாத பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் வெளிநாடுகளிலிருந்து கோவைக்கு வந்த 162 பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லை. ஆனால் இவர்களில் ரேண்டம் முறையில் 8 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனா்.

மேலும், வெளிநாட்டுப் பயணிகளை 14 நாள்கள் தொலைபேசி வழியாக கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதாரத் துறையை தொடர்புகொள்ளுமாறு பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.