சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று

கொரோனா தொற்று மீண்டும்‌ சீனா, பிரேசில்‌, பிரான்ஸ்‌ நாடுகளில்‌ அதிகளவில்‌ பரவி வருகிறது. இதன்‌ காரணமாக வெளி நாடுகளில்‌ இருந்து கோவை விமான நிலையத்திற்கு வரும்‌ பயணிகளை நோய்‌ தொற்று பரிசோதனை செய்யும்‌ பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு வரும்‌ பயணிகளில்‌ பொதுவாக 2 சதவீத நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த 37 வயதுடைய தொழில் அதிபருக்கு கொரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் கடந்த 27 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக கோவை சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் தனது சொந்த ஊரான சேலத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டதால் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தமிழக சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.