வீடுகளுக்குள் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் செடிகள் வளர்ப்பு: கோவையில் விழிப்புணர்வு கண்காட்சி 

கோவை பீளமேடு பாரதி காலனி பகுதியில் (63 B, 3 வது வீதி) சாய் விண்டேஜ் கலெக்ஷன்ஸ் என்ற பெயரில் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு வீட்டிற்குள் வளர்க்கும் செடிகள், பூ தொட்டி போன்ற அமைப்பில் மட்டும் இல்லாமல் பல்வேறு வடிவங்களில் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இதன் உரிமையாளர் சாய் சந்திர மோகனின் தாயார் கஸ்தூரி கிரி செடிகள், தோட்டம் என ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் வீடுகளுக்குள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் செடிகளை வளர்க்கும், 3 நாள் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விற்பனையை சௌரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் கஸ்தூரி கிரி தொடங்கியுள்ளார். நாளை (டிசம்பர் 24) வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: மக்கள் தொகை பெருக்கத்தால் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இதனால் பிராணவாயு குறைந்து கொண்டே வரக்கூடிய சூழ்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய தாவரங்களை வளர்க்கும் விதமான முயற்சிகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

வீடு மற்றும் அலுவலகங்களில் அழகிற்காகவும், மன அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்படும் இந்த செடிகள் அதிக அளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் என்றார்.