சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.08 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மேலும் நொய்யல் ஆற்றில் நீர் அதிகரித்துள்ளது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மழை காரணமாக 40.08 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோவைக்கு இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.