தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது – கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கோவை தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார், ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு தொழில்நுட்பம் சம்பந்தமான கருத்துக்களையும், புதிய தொழில்நுட்பம் புகுத்துதல், தற்பொழுது கோவை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையும் எடுத்துரைத்தார்.

அதன்பின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: கோவை மாநகரம் மிக சிறந்த வளர்ச்சியை நோக்கி செல்கின்றது என்பதை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வளர்க்கவேண்டும்.

பல்வேறு நாடுகளுக்கு நான் சென்று வந்து உள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவே தெரிவிக்கின்றனர். கோவையை பொறுத்தவரை அமைதியாக உள்ளது. அமைதியை சீர் குலைக்கும் விதமாகவே சிலிண்டர் விபத்தை நான் பார்க்கிறேன். வன்முறை, தீவிரவாதம் போன்றவற்றுக்கு எதிராக தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

கோவையில் காவல்துறையினர் செயல்பாடு சிறப்பாக உள்ளது. ஐடி துறையில் நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை தமிழக முதல்வர் அறிவித்து திறன் மேம்பாட்டை மேம்படுத்தி வருகின்றனர். ஐடி துறையை பொருத்தமட்டில் தமிழகத்தை நம்பிவரும் அனைவரு‌க்கும் தேவையான உதவிகளை தமிழக அரசு மேம்படுத்தி வருகின்றது. ஐடி துறை நடத்துவதற்கு முறையான பாதுகாப்பு இருக்க வேண்டும். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு ஏற்படுத்தி தருவதில் முனைப்பாக உள்ளது.

மின்கட்டணம் நியாயமான மின்கட்டணமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மின்கட்டணம் உயர்வு அடைந்துள்ளது. அனைத்து விலைவாசிகளும் உயர்வை கண்டுள்ளது. அதனால் தொழில்துறைக்கு ஏற்ற வகையில் மின்கட்டணம் உள்ளது இதில் குறை இல்லை என தெரிவித்தார்.