கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் கோர்ஸ்இரா என்ற ஆன்லைன் கல்வி வழங்கும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கோர்ஸ்இரா இந்திய பிரிவின் மேலாண்மை இயக்குனர் துள்லிஸ் கிருஷ்ணன் மற்றும் இந்த நிறுவனத்தின் பல்கலைக்கழகங்கள் பிரிவு இயக்குனர் வினோத் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ்இரா தளத்தின் மூலம் வழங்கும் தங்களது பாடத்திட்டம் சார்ந்த படிப்புகளையும், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றியும், மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற முடியும். இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை கற்று தேர்வதின் மூலம் அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் எளிதில் வேலை வாய்ப்பு பெற முடியும்.

மேலும் ஆசிரியர்களும் இந்த கோர்ஸ்இரா தளத்தில் உள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை கற்று, தங்களது திறனை வளர்த்துக் கொள்ளவும் அதன் மூலம் புதிய ஆராய்ச்சி திறன்களை வளர்க்கவும் முடியும்.

மேலும் மற்றுமொரு நிகழ்வில் கே.பி.ஆர் பொறியியல்‌ கல்லூரி மற்றும் நாஸ்காம் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் தொழில்துறைக்கு தேவையான திறன்களையும், எதிர்கால வளர்ச்சிக்கான திறன்களையும் மாணவர்கள் பெற முடியும்.

இந்த ஒப்பந்தம் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் நவநீத் சமயர் மற்றும் நாஸ்காம் நிறுவனத்தின் உதயசங்கர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இதன் மூலம் நாஸ்காமின் ‘ஃபியூச்சர் ஸ்கில் ப்ரைம்’ தளத்தில் கிடைக்கும் பாடங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள முடியும். இங்கு பாடத்திட்டம் சார்ந்த படிப்புகள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அடிப்படை பாடங்களையும் ஆழ்ந்த பாடங்களையும் ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

இந்தப் பாடங்கள் இலவசமாக கேபிஆர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறையின் தலைவரும் இந்த பாடத்திட்டங்களின் ஒருங்கிணைப்பாளருமான கார்த்திகேயன் உள்பட அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இந்த புதிய பாடங்களை படிப்பதற்கு பதிவு செய்துள்ள அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.