ஏ.பி.ஆர்.ஓ பணிக்கு நேரடி நியமனம் ரத்து – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ரத்து செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கல்வி தகுதியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இதுவரை நேரடியாக நியமித்த நிலையில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும்.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம், மக்கள் தொடர்பு துறையில் 2 ஆண்டு அனுபவம், தமிழ், ஆங்கிலத்தில் கம்ப்யூட்டர், டைப்ரேட்டிங் படித்தவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இனி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி ஜெர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன், அட்வர்டைசிங், மல்டி மீடியா, விசுவல் கம்யூனிகேசன், மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும்.

அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் முதுநிலை டிகிரி, டிப்ளமோ(ஜெர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன், அட்வர்டைசிங், மல்டி மீடியா சயின்ஸ்) படித்திருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டு ஜெர்னலிசம், மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும்.

மேலும், 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வபோது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும். அந்தவகையில், நேரடி நியமனம், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வின் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

இதே போல தமிழக சட்டசபையில் செய்தியாளர்கள் பணியும் டி.என்.பி.எஸ்.சி மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.