அரைவேக்காடு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கவில்லை – மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் ஜூலை 2ம் தேதி மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் 47 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சியரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை அமையம் அமைக்கப்படும்’ என்றார்.

‘அரைவேக்காடு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை. நானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட வாந்தியெடுக்கும் அளவுக்கு பேட்டி தருவோருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனத்தை மதிப்பதில்லை’ எனக் கூறினார்.

‘தி.மு.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. நான் நினைப்பது மட்டும் நடக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலம் பிரபலமாக நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன்’ எனக் கடுமையாக பேசினார்.