முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராகிறாரா திரௌபதி முர்மு?

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

இந்திய குடியரசுத் தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.

1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்.எல்.ஏ, எம்.பி.யின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்.பி, மக்களவை எம்.பி.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.

உதாரணமாக, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள் தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றை விட அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்.

வாக்கு மதிப்பு கணக்கீடு:

இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தரப்பிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ பதவி. அங்கு ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு

234 x 176 = 41,184. அதே சமயம், நாட்டில் உள்ள ஏனைய எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.  மாநில மக்கள் தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலை தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் நியமிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் நடத்துவார். மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  புதுச்சேரியில் சட்டப்பேரவை செயலாளர் ஆர். முனிசாமி, சட்டப்பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் என். அலமேலு ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலின் விதிமுறைகள்:

இந்திய குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் விதி 7இன் படி இந்த தேர்தல் இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகத்திலும் நடைபெறும். இந்த தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் ரகசியமாக தங்களுடைய வாக்குரிமையை செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் பிரத்யேக பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சம்பந்தப்பட்ட வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுப்பதும், செல்வாக்கை செலுத்தி வாக்குரிமை செலுத்த நிர்பந்திப்பதும் சட்டவிரோத செயலாக கருதப்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட சம்பந்தப்பட்ட வேட்பாளர் நேரடியாகவோ அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் மூலமாகவோ வேட்பு மனுவை சமர்ப்பிக்கலாம். ஆனால், அவரது வேட்பு மனுவுடன் அவரை முன்மொழிந்து 50 வாக்காளர்களும், வழிமொழிந்து 50 வாக்காளர்களும் மனுவில் ஆதரவைத் தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தலா ஒரு வேட்பு மனுவை முன்மொழிபவராகவோ வழிமொழிபவராக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை வாங்க அனுமதிக்கப்படுவார்.

வேட்பு மனுவுக்கு முன்னதாக, அவர் ரிசர்வ் வங்கி கரூவூலத்திலோ, அரசு கருவூலத்திலோ ரூ. 15 ஆயிரம் பாதுகாப்பு டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களான எம்.எல்.ஏ, எம்.பி.க்களின் சமீபத்திய முகவரி, தொடர்பு எண் விவரங்கள் அடங்கிய பட்டியலை ரூ. 300 கட்டணம் செலுத்தி தேர்தல் ஆணையத்தில் பெறலாம்.

குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களில் எம்.எல்.ஏ ஆக இருந்தால் அவர், மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். எம்.பி ஆக இருந்தால் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். மிகவும் அவசரத் தேவை எழுந்தால் மட்டுமே எம்.பி ஒருவர் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்னனுமதி பெற்று சட்டப்பேரவை வளாக வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்கப்படுவார்.

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் இடம்பெற்ற பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்படும். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் இந்த வாக்குகள் எண்ணப்படும்.

குடியரசுத் தலைவரின் பொறுப்பு:

இந்தியாவில் அனைத்து அதிகார உரிமைகளை பிரதமர் மட்டுமே கொண்டிருக்கவில்லை. அரசியலமைப்பில் ஒவ்வொருவருக்கும் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவருக்கே அரசியலமைப்பின் முழு நிறைவேற்று அதிகாரமும் உள்ளது.

அதை அவர் சுயமாகவோ தனக்குக் கீழ் உள்ளவர்கள் மூலமாகவோ பயன்படுத்தலாம். பிரதமரை நியமிப்பது மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குடியரசுத் தலைவரின் முக்கிய பொறுப்பு. இருவரும் தத்தமது பணிகளை தங்களுடைய அதிகார வரம்பை உணர்ந்து செயல்படுத்துவார்கள். இந்த இருவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த சட்டமும் செயல் வடிவம் பெறாது.  நிதி மசோதா நீங்கலாக வேறெந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டுமே. அதுபோல இரண்டு முறை குடியரசுத் தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே.

யாருக்கு வாய்ப்பு:

இந்த முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்கட்சிகள் சார்பில் திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண் போட்டியிடுவது இப்போது தான். மோடி மற்றும் அமித்ஷா பாஜகவை வழிநடத்த தொடங்கிய பிறகு பாஜகவை அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமராக முன்னிறுத்தப்பட்டபின், இதர பிற்பட்ட சமூக வாக்குகள் பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளன. அதேபோல, தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்கியது, அம்பேத்கர் பற்றி புகழ்ந்து பேசியது, அம்பேத்கருக்கு சிலை வைத்தது, பாரத ரத்னா விருது கொடுத்தது, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்து கொடுத்தது ஆகிய காரணங்களால் பெரும்பாலான தலித் சமூக மக்கள் ஆதரவு மோடி தலைமைக்கு கிடைத்து வருகிறது.

இப்போது பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒருவருரை குடியரசுத் தலைவராக முன்னிறுத்தியுள்ளதால் பாஜகவால் பழங்குடியினர் மத்தியில் கூடுதல் வாக்கு வங்கி பெற முடியும். பழங்குடியினத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவை முன்னிறுத்தியே பாஜக பழங்குடியினர் மத்தியில் இப்போது அரசியல் செய்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு  48 சதவீத வாக்குகள் உள்ளன. இதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், பகுஜன் சமாஜ், சிவசேனையில் இருந்து உடைந்த ஏக்நாத் ஷிண்டே பிரிவு கட்சி உள்ளிட்டவற்றுடன் சேர்த்து இப்போது 60 சதவீத வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.

அதேபோல, எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 40 சதவீத வாக்குகளை பெறவே வாய்ப்பு உள்ளது.  பாஜக மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு, மோடி மற்றும் அமித்ஷா காலத்தில் பெரிய முக்கிய பொறுப்புகள் கிடைக்காததால், பாஜகவில் இருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தார்.  இவர் பீகாரை சேர்ந்த உயர் சமூகமான ஹயஸ்தா சமூகத்தை சேர்ந்தவர்.

எதிர்க்கட்சிகளின் நிலை:

மேற்கு வங்கத்தில் ஹயஸ்தா சமூகம் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. அதை உடைக்க பிராமணரான மம்தா பானர்ஜி, ஹயஸ்தா சமூகத்தை சேர்ந்த யஷ்வந்த் சின்காவை துணைத் தலைவராக வைத்திருந்தார். அதேபோல, இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளார். பாஜகவுக்கு கிடைக்கும் அதிகபட்ச ஹயஸ்தா சமூக வாக்குகளை குறிவைக்கிறார் மம்தா பானர்ஜி.

காங்கிரஸ், இடதுசாரிகள், வேறு வழியின்றி யஸ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் இடதுசாரிகள், திரிணாமூல் கட்சியை எதிரியாக வைத்து அரசியல் செய்யும் கட்சி.

ஆனால், பொது குடியரசுத் தலைவர் வேட்பாளர் கிடைக்காததாலும், தங்களாலும் ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் சக்தி இல்லாததால் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும் நிலைக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மதசார்பின்மை என்ற அடிப்படையில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கின்றன. சமூகநீதியை விட இந்த இடத்தில் மதசார்பின்மை மேலோங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி தான் இந்த இடத்தில் மிகவும் சிரமமான சூழலில் சிக்கியுள்ளது. போட்டியில் மம்தா பானர்ஜி முந்தியதால் அவருக்கு பின்னால் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.

ஜார்கண்ட் பழங்குடியின கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சா இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இதற்கு காரணம், அது பழங்குடியினத்தவரை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சி.  காங்கிரஸ் தயவில் ஹேமந்த் சோரன் அங்கு  ஆட்சியை நடத்தி வருகிறார். இப்போது அந்த கட்சி பழங்குடியின வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஆட்சியை தக்கவைக்க எதிர்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதா என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கே.சி.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ரிய சமிதி கட்சி கடைசி வரை இழுத்து அடித்து கடைசிநேரத்தில் மதசார்பின்மை என்ற புள்ளியில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறது. இது இந்திய அரசியலில் புதிய பரிணாமமாகவே பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் எவ்வளவு ஆதரித்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை பொறுத்தவரை 40 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்கு பெறும் சூழல் உள்ளது.

அதிமுகவில் இரு அணிகளும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த முறை ஓ.பி.எஸ், இ.பி.எஸ், டி.டி.வி.தினகன் ஆகிய மூன்று அணிகளுமே பாஜக வேட்பாளருக்கு தான் ஆதரவு தெரிவித்திருந்தன.

பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா?

குடியரசுத் தலைவர் வேட்பாளராக இஸ்லாமியரை முன்னிறுத்துவதா அல்லது பழங்குடியினரை முன்னிறுத்துவதா என பாஜக முதலில் யோசனையில் இருந்தது. ஆனால் கடைசியில், குஜராத் தேர்தலை மையமாக வைத்து பழங்குடியின வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளார் மோடி. அங்கு 10 சதவீத பழங்குடியினர் ஆதரித்தால் பாஜகவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அதேபோல, 2024 மக்களவைத் தேர்தலில் ஜார்கண்ட், சத்திஷ்கர், ஒடிசா மாநிலங்களில் கூடுதல் வாக்குகள் பெற பாஜகவுக்கு வாய்ப்புள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தலித் ஒருவர் வேறு மதம் தழுவினால் ஓ.பி.சி பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அதேவேளை, எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர் அதே சமூகத்திலேயே இருக்கிறார். இது பழங்குடியினர் சமூகத்தில் உள்ள இந்துக்களின் வாய்ப்பை பறிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆகும்போது இந்த பிரிவு திருத்தப்படலாம். அது பழங்குடியின இந்து வாக்குகளை பாஜகவை நோக்கி கூடுதலாக நகர்த்தும். தமிழகத்திலும் பெரிய அளவில் வாக்கு வங்கி லாபத்தை எதிர்பார்க்காமல் அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதி, எஸ்.டி சமூகத்தினருக்கு தனியாக ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கியது சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது. அதனால், அரசியல் லாபம் கருணாநிதிக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், சமூகநீதி என்ற பார்வையில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கலாம் என்ற பேச்சு ஆரம்பத்தில் எழுந்தது. ஆனால், மதசார்பின்மையில் உறுதி என்ற நிலையில் யஷ்வந்த் சின்ஹாவை மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன், வேட்பாளரை அறிவிக்கும் முன்பு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொன்னார். அவரும், திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கிறார். அடுத்த மாதத்தில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

இதுவரை குடியரசு தலைவராக இருந்தவர்கள் யார்,

அவர்களின் பதவிக்காலம் என்ன?

* ராம்நாத் கோவிந்த் (பிறந்த தினம்: 1945 அக்டோபர் 1) பதவிக்காலம்: 2017 ஜூலை 25 முதல் தற்போது வரை

* பிரணாப் முகர்ஜி (பிறப்பு 1935, இறப்பு 2020) பதவிக்காலம்: 25 ஜூலை, 2012 முதல் 25 ஜூலை, 2017 வரை

* பிரதிபா தேவிசிங் பாட்டீல் (பிறப்பு 1934) பதவிக்காலம்: 25 ஜூலை, 2007 முதல் 25 ஜூலை, 2012 வரை

* ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (பிறப்பு 1931, இறப்பு 2015) பதவிக்காலம்: 25 ஜூலை, 2002 முதல் 25 ஜூலை, 2007 வரை

* கே. ஆர். நாராயணன் (பிறப்பு 1920, இறப்பு 2005) பதவிக்காலம்: 25 ஜூலை, 1997 முதல் 25 ஜூலை, 2002 வரை

* ஷங்கர் தயாள் சர்மா (பிறப்பு 1918, இறப்பு 1999) பதவிக்காலம்: 25 ஜூலை, 1992 முதல் 25 ஜூலை, 1997 வரை

* ஆர். வெங்கட்ராமன் (பிறப்பு 1910, இறப்பு 2009) பதவிக்காலம்: 25 ஜூலை, 1987 முதல் 25 ஜூலை, 1992 வரை

* கியானி ஜைல் சிங் (பிறப்பு 1916, இறப்பு 1994) பதவிக்காலம்: 25 ஜூலை, 1982 முதல் 25 ஜூலை, 1987 வரை

* நீலம் சஞ்சீவ ரெட்டி (பிறப்பு 1913, இறப்பு 1996) பதவிக்காலம்: 25 ஜூலை, 1977 முதல் 25 ஜூலை, 1982 வரை

* ஃபக்ருதீன் அலி அகமது (பிறப்பு 1905, இறப்பு 1977) பதவிக்காலம்: ஆகஸ்ட் 24, 1974 முதல் பிப்ரவரி 11, 1977 வரை

* வராஹகிரி வெங்கட கிரி (பிறப்பு 1894, இறப்பு 1980) பதவிக்காலம்: 3 மே, 1969 முதல் 20 ஜூலை, 1969 மற்றும் 24 ஆகஸ்ட், 1969 முதல் 24 ஆகஸ்ட், 1974 வரை

* ஜாகிர் உசேன் (பிறப்பு 1897, இறப்பு 1969) பதவிக் காலம்: 13 மே, 1967 முதல் மே 3, 1969 வரை

* சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பிறப்பு 1888, இறப்பு 1975) பதவிக்காலம்: 13 மே, 1962 முதல் 13 மே, 1967 வரை

* டாக்டர். ராஜேந்திர பிரசாத் (பிறப்பு 1884, இறப்பு 1963) இரண்டு முறை பதவிக்காலம் வகித்தார்.

பதவிக்காலம்: 26 ஜனவரி, 1950 முதல் 13 மே, 1962 வரை