புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் என்ன சொல்கிறது?

மத்திய அரசு ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் இதை ஒப்புக்கொண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்த உள்ளன. இதில் மொத்தம் நான்கு பிரிவுகளில் இருபத்தி ஒன்பது சட்ட விதிமுறைகள் உள்ளன. இவற்றில் ஊதியம் குறித்து, நான்கு கட்ட பாதுகாப்பு குறித்து, பாதுகாப்பு சூழல் உடல்நலம் குறித்து, 13ம் தொழிலாளர் உரிமை குறித்த மூன்று சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் மத்திய மாநில அரசு பணியாளர்களுக்கு பொருந்தாது. தனியார் பணியாளர் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என அரசு கூறுகிறது. ஆனால் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற எதிர்மறை கருத்துகளும் உள்ளன.

எடுத்துக்காட்டாக புதிய சட்ட விதிப்படி சம்பளத்தில் 50 சதவீதம் அடிப்படை சம்பளமாக கணக்கிடப்பட வேண்டும். அப்பொழுது பி.எப். தொகை பங்களிப்பு அதிகரிக்கும் அதனால் மொத்த தொகை அதிகரிக்கும். தொழிலாளர்களின் பிற்கால வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்பொழுது அதிக தொகையை இதற்காக பிடித்துக்கொண்டால் வீட்டிற்கு கொண்டு செல்லும் பணம் குறையும் போது எவ்வாறு இப்போதுள்ள செலவினங்களை எதிர்கொள்வது, ஏறிவரும் விலைவாசி எவ்வாறு சமாளிப்பது என்ற கேள்வி எழுகிறது. அதைப்போலவே பிராவிடண்ட் பண்ட் அதிகமாக பிடித்தால் ஏற்கனவே தனது பங்குத் தொகையை போடுவதற்கு தடுமாறி வரும் நிறுவனங்கள் இன்னும் அதிகமாக போட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. அவர்கள் இதை தவிர்ப்பதற்காக புதிய வழிமுறைகளை தேடுவார்கள். எனவே இந்த பிராவிடண்ட் பண்ட் அதிகமாவது உடனடியாக நல்லதல்ல என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

ஆனால் தொழிலாளர் நலனுக்காக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. இல்லை, இல்லை, இது மத்திய அரசுக்கு மட்டுமே பயன்படும். ஏனென்றால் இது பிராவிடண்ட் பண்ட் தொகை மூலமாகவும் நிதி திரட்டும் என்ற ஒரு யுக்தி என்று கூறப்படுகிறது. எட்டு மணி நேரம் என்பது வாரத்துக்கு நாற்பத்து எட்டு மணி நேரம் என்பது உறுதியாகும். இதை நான்கு நாட்கள் செய்தால் வாரத்துக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு இது சரியாக வருமா? ஏற்கனவே உற்பத்தி பாதிக்கப்பட்ட இடங்களில் என்ன செய்வார்கள் அல்லது ஏற்கனவே ஓவர்டைம் செய்து கொண்டிருப்பவர்கள் இடங்களில் இந்த முறையை எப்படி அமல்படுத்துவது? அதுவுமல்லாமல் தொழில் வணிகம் இணைந்து செயல்படும் இடங்கள், மாலை நேரம் வரை செயல்படும் வாடிக்கையாளர் மையங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர் எப்படி எந்த முறையில் பணிபுரிய வேண்டும் என்பது அந்தந்த இடங்களை பொறுத்து கண்டிப்பாக மாறுபடும். அப்போது இந்த தொழிலாளர் நல சட்ட விதிமுறைகளால் என்ன பயன் என்று தெரியவில்லை.

200 ஆண்டுகளுக்கு முன்புவரை தொழிற்புரட்சி ஏற்படும்வரை தொழிலாளர் சட்டங்கள் என்ற ஒன்று தனியாக தேவைப்படவில்லை. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா போன்ற நாடுகள் மட்டுமல்லாது உலக அளவில் தொழிலாளர் என்கின்ற ஒரு புதிய சமூகம் ஏற்பட்ட பிறகு தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தான் இந்த சட்டங்கள் உருவாக வழிவகை செய்தது.

இந்த சூழலில்தான் தொழிற் சட்டங்கள் உருவாகின. சொல்லப்போனால் தொழில் தகராறுகள் சட்டம் என்றுதான் அழைக்கப்பட்டன. முதல் 50 ஆண்டுகள் குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொழிலாளர் தொடர்பான பிரச்சனைகள் ஆலை வாயில் முதல் நீதிமன்ற வாயில் வரை நடைபெற்றன. ஆனால் அந்த சூழல் இன்று மாறிவிட்டது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகமயமாக்கல் வந்த பிறகு உலக அளவில் தொழிலாளர்கள் தொழில் நிறுவனம் குறித்த எல்லா செய்திகளும் மாறிவிட்டன.

நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் உறவுகளில் பல்வேறு வகையான மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுள்ளன. அதுவும் குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள் வந்த பிறகு நிலைமை முற்றிலுமாக மாறி இருக்கிறது. இந்த புதிய நூற்றாண்டில் இந்தியா பல வகையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. வளர்ந்த நாடுகளின் கூட்டத்திற்கு அழைக்கப்படும் அளவிற்கு இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக மதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அகில உலக அளவிலும் அரசியல் சூழ்நிலைகள் மாறி வருகின்றன. இந்த சூழலில் இந்தியா மிகவும் கவனிக்கப்படும் நாடாக மாறியிருக்கிறது. பொருளாதார அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள தொழில் துறையில் பல சீரமைப்புகள் தேவைப்படுகின்றன. அந்த சீரமைப்பின் ஒரு பகுதியாகத்தான் இந்த தொழிலாளர் சட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிகள் கட்டாயமல்ல. நிறுவன ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே இதனை நெகிழ்வுத் தன்மையுடன் செயல்படுத்தலாம் என்று அரசு கூறியிருக்கிறது.

அந்த வகையில் இதை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, இது இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கும்  நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அப்படியே பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் எந்தெந்த தொழில்களுக்கு இது பொருந்துமோ அங்கெல்லாம் இந்த சட்ட விதிமுறைகளை அமல்படுத்தி கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் வேலை, ஓவர்டைம் என்பதெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்து அந்தந்த தொழில் நிறுவனமும், தொழிலாளர்களும் முடிவு செய்து கொள்ள வேண்டியது.

அடுத்து இதைப்போலவே நாட்டின் மிகப்பெரிய தொழில் துறையாக இருக்கும் விவசாயத்திற்கும், மீதி உள்ள உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், மூன்றாவதாக முறைசாரா தொழிலாளர்களுக்கும் இது போன்ற வாழ்க்கை பாதுகாப்பு அளிக்கக் கூடிய புதிய சட்ட விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.