நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்

கோவையில் கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி திறக்கப்பட்டு வழிபாட்டுக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள புளியகுளம் முந்தி விநாயகர் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட 273 கோவில்கள் இன்று பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது‌‌. இதனை அடுத்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன், எருக்கம் பூ, அருகம்புல் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.