கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட டாஸ்மாக்

நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டமில்லாமல் இருப்பது டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவை திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இன்று அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவையை பொறுத்தவரை 293 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக டாஸ்மாக் முன்பு வண்ணப்பூச்சுக்கள் கொண்டு வட்ட வடிவிலான அமைப்புகள் வரையப்பட்டன. மாஸ்க் அணியாமல் வருவோருக்கு மதுபானம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த முறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் திறக்கப்பட்ட போது பல பிரச்சனைகள் எழுந்ததால், இந்த முறை டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து மதுபானம் விற்பனை செய்ய ஆவலோடு காத்திருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கோவையை சேர்ந்த மது பிரியர்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

கோவையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் கூட்ட நெரிசல் இல்லாமல் உள்ளது. சில கடைகளில் மதுபானம் வாங்க ஒருவர் கூட வரவில்லை.

மதுபானம் விற்பனை செய்ய தடுப்புகள் அமைத்து, போலீசார் துணையோடு காத்திருந்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.