ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் குறைக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், ‘ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) என்பது ஒருவர் ஆசிரியர் என்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு மட்டுமே. தற்போது இந்தத் தேர்வு ஆசிரியர் பணியைப் பெறுவதற்தான தேர்வு அல்ல. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்காக TNTET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இரண்டாவதாக ஒரு தனி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது.

ஆகவே ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தற்போது ஆசிரியர்களின் தகுதியை மட்டும் நிர்ணயிக்கும் தேர்வு என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 75 ஆகவும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 60 ஆகவும் மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் குறைத்து வழங்க வேண்டும்.
உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் OC (பிற பிரிவு) விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60% அதாவது 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பு) விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 50% அதாவது 75மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

SC/ST/மாற்றுத் திறனாளிகள் PH) விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% அதாவது 60மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆந்திராவைப் போன்றே மேலும் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

எனவே பிற மாநிலங்களில் உள்ளபடி தமிழ்நாட்டிலும் தேர்வர்கள் நலன் கருதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து சமூக நீதியினை மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நிலை நாட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்பதே தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.