தமிழக மக்களிடம் தி.மு.க. – காங். மன்னிப்பு கேளுங்க…!

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து கச்சத்தீவு தொடர்பான சில தகவலைப் பெற்று வெளியிட்டார். தற்போது, கச்சத்தீவு தொடர்பான விவாதங்கள் அரசியல் மேடைகளில் பேசும் பொருளாகியுள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுவரும் அண்ணாமலை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தி.மு.க. கச்சத்தீவு விவகாரத்தில் இதுவரை காங்கிரசை மட்டுமே குறை கூறி வந்துள்ளது. இதில் தி.மு.க. விற்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.அன்றைக்கு முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தெரிந்தே தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில் 21 முறை கடிதம் எழுதியுள்ளதாகக் கலைஞர் கருணாநிதி பொய்யாக நாடகமாடியுள்ளார். கச்சத்தீவைத் தாரை வார்த்ததற்காகக் காங்கிரஸ் கட்சி பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பிரசாரத்தில் தி.மு.க.-வும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் மற்ற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்காமல் உள்ளது.

19 ஜூன் 1974ல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்தித்துப் பேசிய சுமார் ஒரு மணி நேர சந்திப்பின் குறிப்புகள் வெளிவந்துள்ளது. ஒன்பது பக்கங்கள் கொண்ட இந்த குறிப்பில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்துத் தெரிய வருகிறது.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவைக் கொடுப்பது குறித்துப் பேசலாம், இப்போது வேண்டாம் எனக் கருணாநிதி கேட்டுள்ளார் என்பது இந்த ஆவணத்தில் உள்ளது.

பின்னர் கச்சத்தீவை இலங்கையிடம் வழங்குவதற்குக் கலைஞர் சம்மதம் தெரிவித்ததோடு சிறிய அளவு போராட்டங்கள் செய்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரத்தில் 21 முறை அன்றைக்கு முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி நாடகமாடியுள்ளார். இதே காங்கிரஸ் தி.மு.க. ஆட்சியில் போது தான் அருணாச்சல பிரதேசமும் கொடுக்கப்பட்டது.2014 ஆண்டுக்கு முன்பு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கும் 2014 க்கு பிறகு தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும் காரணம் தி.மு.க. தான்’ என தெரிவித்தார்.